Header Ads



வசமாக சிக்கிய மேர்வின். அதிர்ச்சியூட்டும் சொத்து விபரங்கள்


முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முறையற்ற சொத்துக்கள் தொடர்பான வழக்கு மூலம் பல அரசியல்வாதிகளுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.


இந்த வழக்கு கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சேர்த்த பல சொத்துக்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் அடுத்த மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


இதன்போது பல வங்கிகளின் முகாமையாளர்கள் பல கணக்குகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேர்வின் சில்வா 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தொழில் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக பதவியேற்றிருந்தார்.


2 வருடங்கள் வரையிலான மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் தனது சட்டப்பூர்வமான வருமான வழிகளால் பெருமளவிலான சொத்துகு்களை சேர்த்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


பான் ஏசியா வங்கியின் கொழும்பு கிளையில் மாத்திரமன்றி, 10 நிலையான வைப்புகளில் 1823 லட்சத்துக்கும் அதிகமான ரூபாவை வைப்பிலிட்டுள்ளார். இதில் உள்ள ஒரு வைப்பு மாத்திரம் 6 கோடி ரூபா பெறுமதியைக் கொண்டுள்ளது.


அத்துடன், 366, 365 மற்றும் 225 லட்சம் ரூபாவைத் தாண்டிய மேலும் 3 பெரிய வைப்புகளும் அங்கு காணப்பட்டுள்ளன.


இது தவிர அவர் பான் ஏசியா வங்கியில் 33 லட்சம் ரூபாவைத் தாண்டிய மேலும் 5 நிலையான வைப்புக் கணக்குகளைப் பராமரித்து வந்துள்ளமையும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.


தனது மனைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.ஏ. மேரி லூசிடா சில்வா மற்றும் மகன் மாலக மனோஜித் சில்வா ஆகியோருடன் இணைந்து பல கூட்டு கணக்குகளையும் அவர் பராமரித்து வந்துள்ளார்.


பான் ஏசியா வங்கியில் மனைவியுடன் இணைந்து முன்னெடுத்த கூட்டுக்கணக்கு ஒன்றில் 2,140,199.36 ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மேலும் ஹற்றன் நேஷனல் வங்கியுடன் மகனின் பெயரில் பேணப்பட்ட கணக்கில் 2,687,852.25 ரூபாயும் 2010ஆம் ஆண்டளவில் காணப்பட்டுள்ளது.


இது தவிர, மாலக சில்வாவின் பெயரில் மாத்திரம் வெலிபல் பைனான்ஸ் நிறுவனத்தில் 15 மற்றும் 35 மில்லியன் ரூபா வீதம் இரண்டு கணக்குகள் காணப்பட்டன. அத்துடன், மகள் சந்தீபனி மல்லிகா சில்வா மற்றும் மருமகன் பெயரில் தலா 15 மில்லியன் ரூபா வைப்புகளும் அதே நிறுவனத்தில் பராமரித்து வரப்பட்டுள்ளன.


மேர்வின் சில்வாவின் பெயரிலும் குறித்த நிறுவனத்தில் 14 மில்லியன் ரூபா வைப்புகள் இருந்தன.


மூன்று வங்கிகளில் பராமரித்து வந்த நடப்புக் கணக்குகளில் 2012ஆம் ஆண்டளவில் 47 லட்சத்திற்கும் அதிகமான பணம் மீதியாக இருந்தது. ஹட்டன் நேஷனல் வங்கியில் 32.5 மில்லியன் ரூபாவும், DFCC வர்த்தன வங்கியில் 6.8 மில்லியன் ரூபா வைப்புகளும் அவரிடம் இருந்தன.


மேர்வின் சில்வா கொள்வனவு செய்துள்ள பல அசையா சொத்துக்கள் தொடர்பிலும் பல தகவல்கள் இந்த வழக்கில் தெரியவந்துள்ளது.


முன்னாள் அமைச்சர் கொழும்பின் உச்ச பெறுமதியைக் கொண்ட பிரதேசங்களில் சொத்துக்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.


அதற்கமைய, கொழும்பு 07, குரும்பட்டியின் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் 71.3 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியொன்றும், ராஜகிரிய, நாவல வீதியிலிருந்து 39.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியொன்றும் அவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.


இது தவிர தலுபிட்டிய பிரதேசத்திலிருந்து 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியொன்றும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் விக்டோரியா திட்டத்திற்குச் சொந்தமான குண்டசாலை நிலகம பிரதேசத்தில் அமைந்துள்ள அரசாங்கக் காணியை 1994ஆம் ஆண்டு முதல் 1,600 ரூபா போன்ற மிகக் குறைந்த குத்தகைக்கு அவர் கையகப்படுத்தியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அமைச்சராக இருந்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் 7 வாகனங்களைக் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்த வாகனங்கள் மிக குறுகிய காலத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அவர் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி போர்ஷே ரக மோட்டார் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளார். அதிலிருந்து 3 மாதங்களுக்கு பின்னர் ஜூலை மாதத்தில் தனது மகன் மாலக சில்வாவுக்கு 28.8 மில்லியன் ரூபா பெறுமதியான ரேஞ்ச் ரோவர் வாகனத்தைக் கொள்வனவு செய்து கொடுத்துள்ளார்.


அதிலிருந்து மூன்று மாதங்களுக்கு பின்னர் தனது பயன்பாட்டிற்காக 32.3 மில்லியன் ரூபா பெறுமதியான பென்ஸ் வாகனத்தை கொள்வனவு செய்துள்ளார். இந்த வாகனங்களுக்கு மேலதிகமாக 20 லட்சம் ரூபா பெறுமதியான லேன்ட் ரோவர் வாகனம், 9 மில்லியன் ரூபா பெறுமதியான ஹையுன்டாய் ஜீப் வாகனம் மற்றும் 58 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு லொறி வாகனங்களும் இரண்டு வருடங்களுக்குள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.


அவரது நாளாந்த செலவு முறையும் மிக உயர்ந்த மட்டத்தில் இருந்தமை வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சிகள் மூலம் தெளிவாகும் மற்றொரு விடயமாகும்.


மேலும் அவர் சம்பத் மற்றும் செலான் வங்கிகளின் இரண்டு கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி இரண்டு வருடங்களுக்குள் 42 லட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுள்ளார்.


அதேபோல் மூலங்கள் வெளிப்படுத்தப்படாத 34.7 மில்லியன் ரூபா அளவிலான பிரம்மாண்டமான கடன் தொகையொன்றையும் செலுத்தி முடித்துள்ளார்.


இதற்கு மேலதிகமாக ரித்து ஆகர்ஷா எனும் நபருக்காக 240,000 ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகைக்கு இணங்க தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவர் தனக்காக எந்தவொரு உயிர் காப்பீட்டு ஒப்பந்தத்தையும் பெற்றுக்கொள்ளாவிட்டாலும், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக 6 காப்பீட்டு ஒப்பந்தங்களைப் பராமரித்து வந்துள்ளார்.


இதற்காக வருடாந்தம் 13 லட்சம் வரையிலான பணம் தவணையாகச் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 4 காப்பீட்டு ஒப்பந்தங்களும் மாலக சில்வாவிற்காகவே பராமரித்து வரப்பட்டுள்ளன.


2 வருடங்கள் போன்ற குறுகிய காலப்பகுதிக்குள் 485 மில்லியன் ரூபாவுடனான பிரம்மாண்டமான சொத்துக்களை எவ்வாறு சம்பாதித்தார் என்பது குறித்து எதிர்கால வழக்கு விசாரணைகளின் போது மேலதிக தகவல்களை வெளிப்படுத்துவதற்காக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.