கபில சந்திரசேன மரணம்: அரவிந்த டி சில்வா இன்று வழங்கிய சாட்சியம்
பிணையில் விடுதலையான பின்னர், பிணையாளர்கள் தொடர்பான பிரச்சினை காரணமாக மீண்டும் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதைக் குறித்து கபில சந்திரசேன மிகுந்த மனவேதனையுடன் இருந்ததாக அவரது உறவினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான அரவிந்த டி சில்வா கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகள் குறித்து கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CCD) இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முதல் முறையாக அறிக்கை சமர்ப்பித்தனர்.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் தற்போது கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக அறிக்கை மற்றும் பிரேதப் பரிசோதனை தொடர்பான இரண்டு இணைப்புகளை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்
சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட சில மருந்துகள் மற்றும் மரணமடைந்தவரின் இரண்டு ரத்த மாதிரிகள் ஆகியவற்றை வழக்குப் பொருட்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்போது, நீதவான் பசன் அமரசேன, மரணமடைந்தவரின் கழுத்தில் காணப்பட்ட பட்டி அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அதிகாரிகள், அதுவும் ஒரு வழக்குப் பொருளாகக் கருதப்பட்டு இன்று அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறினர்.
தொடர்ந்து நீதவான் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அதிகாரிகள், அவர் தூக்கிட்டதாகக் கருதப்படும் கதவின் மேற்பகுதியில் எவ்வித பாதிப்பும் அல்லது சேதமும் காணப்படவில்லை என்றும், எனினும் அங்கிருந்து சில நூல் இழை மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மரணமடைந்தவரின் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ரக கைத்தொலைபேசி அதிக பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது என்பதால், இதுவரை அதனைத் திறக்க முடியவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அதில் முக அடையாளத் தொழில்நுட்பம் காணப்படுவதாகவும், அவரது உடலத்தின் முகத்தைக் காட்டி அதனைத் திறக்க முயன்றும் அது தோல்வியடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால், குறித்த தொலைபேசியை அதன் தாய் நிறுவனத்திற்கு அல்லது பொருத்தமான ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி அதனைத் திறப்பதற்கான உத்தரவை வழங்குமாறு அவர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.
இந்த மரண விசாரணை தொடர்பான சாட்சியப் பதிவின் போது, கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவின் மூத்த சகோதரி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க முதலாவதாகச் சாட்சியமளித்தார்.
“சுவாமி, எனது சகோதரியும் அவரது கணவரும் பிரிந்து வாழ்ந்தனர். தங்கை கடந்த ஆண்டு இறுதி முதல் தனது இரு பிள்ளைகளுடன் அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார். கபில அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருபவர் அல்ல. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் நான்கு முறை மட்டுமே வந்துள்ளார். எனக்கு நினைவிருப்பதன் படி, 2026 மே 06 புதன்கிழமை அன்று கபில பிணையில் விடுதலையாகி நேராக எங்கள் வீட்டிற்கு வந்தார். நான் அவருக்கு உணவும், தர்பூசணி ஜூஸ் மற்றும் தேநீரும் வழங்கினேன். பின்னர் அவர் வீட்டிற்குச் சென்றுவிட்டு, அடுத்த நாள் மாலை 4 மணியளவில் மீண்டும் கார் மூலம் வந்தார். தனது காரை சாரதியிடம் கொடுத்து வீட்டில் கொண்டு போய் விடுமாறு என்னிடம் கூறினார். அன்று இரவு எனது கணவர் அரவிந்த கூறியதன் பேரில், முதல் தளத்திலுள்ள எனது மகனின் அறையை கபில தங்குவதற்காக தயார் செய்து கொடுத்தேன். அடுத்த நாள் காலை சட்டத்தரணி வந்தபோது கபிலவை அழைத்தோம், ஆனால் பதில் இல்லை. பின்னர் மாற்றுத் திறவுகோல் மூலம் அறையைத் திறந்து பார்த்தபோது, அவர் அறையில் இல்லை. நாற்காலி குளியலறை பக்கம் திருப்பப்பட்டிருந்தது. சட்டத்தரணி எங்களை வெளியே வருமாறு கூறினார்” என அவர் தெரிவித்தார்.
அரவிந்த டி சில்வாவின் வாக்குமூலம்:
“பிணை கிடைத்த அன்று கபில என்னிடம் பேசி பணத்தை தயார் செய்யுமாறு கூறினார். பிணையாளர்கள் இருவருக்கு கிராம சேவகர் சான்றிதழ் இல்லாததால், எனக்கு நெருக்கமான இருவரை பிணையாளர்களாக முன்னிறுத்தி மறுநாள் அவரை பிணையில் எடுத்தேன். 7ஆம் திகதி காலை அவர் எனக்கு நன்றி கூறினார். ஆனால், மீண்டும் நீதிமன்ற வழக்கு ஒன்று இருப்பதாக எனக்கு செய்தி கிடைத்தது. அவரை எங்கள் வீட்டிற்கு வருமாறு கூறி, சட்டத்தரணி ஒருவரைச் சந்திக்கச் சென்றோம். அந்த நேரத்தில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. கபிலவை மீண்டும் சிறைக்கு அனுப்ப முயற்சிப்பதாகக் கூறி அவர் மிகுந்த கவலையுடன் இருந்தார். ‘கவலைப்பட வேண்டாம், இதனைச் சரி செய்வோம்’ என்று கூறி அவரை அறையில் உறங்கச் சொன்னேன். அவர் தனது வீட்டிலிருந்து மருந்துகள், உடைகள் மற்றும் ஒரு ‘ஜிம் மேட்’ ஆகியவற்றை வரவழைத்திருந்தார். எதற்காக ஜிம் மேட் என்று கேட்டதற்கு, ஆடைகளைத் தொங்கவிட வேண்டும் என்று கூறினார். மறுநாள் காலை சட்டத்தரணி வந்தபோது கபிலவை அழைத்தோம், ஆனால் அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. பின்னர் மாற்றுத் திறவுகோல் மூலம் அறையைத் திறந்து பார்த்தபோதே இந்தச் சம்பவம் தெரியவந்தது” என அவர் சாட்சியமளித்தார்.
இதேவேளை, கபில சந்திரசேனவிற்கு போலிப் பிணையாளர்களைத் தயார் செய்து கொடுத்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக சாட்சியப் பதிவுகள் வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Post a Comment