Header Ads



எரிபொருள் QR - புதிய பதிவுகள் குறித்து விசேட அறிவிப்பு


தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (National Fuel Pass) முறைமையில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் தற்போது வெற்றிகரமாகச் சீர் செய்யப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. 


இதன்படி, நாளை (17) முற்பகலளவில் அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டு, முறைமை முழுமையாக வழமைக்குத் திரும்பும் என அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 


குறிப்பாக, 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடாக சட்டப்பூர்வமாக உரிமையாளர் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்காகப் புதிய QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும். 


இவ்வாறான புதிய பதிவுகளுக்குத் தேவையான முறைமை மேம்படுத்தல் பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது. 


ஏதேனும் ஒரு QR குறியீட்டுடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கத்தின் உரிமை மாறியிருந்தால் அல்லது அந்தத் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தால், அத்தரப்பினர் குறித்த தகவல்கள் அந்தந்த தொலைபேசி சேவை வழங்குநர் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. 


அதற்கமைய, அந்நிறுவனங்கள் வழங்கும் புதுப்பிக்கப்பட்ட தரவுகளை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடாக முறைமையில் உள்ளீர்க்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. 


இதேவேளை, எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காகப் பதிவு செய்யும் போது, இணையத்தில் உலாவும் போலி இணைப்புகளுக்குச் (Links) சென்று தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 


தரவுத் துஷ்பிரயோகத்தைத் தவிர்க்க எப்போதும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ முறைமையை மாத்திரம் பயன்படுத்துமாறும், நிலவும் சிக்கல்களுக்கு 1919 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.