ரமழானில் சேகரித்த பணம், காணாமல் போய் திரும்பி வந்த சம்பவம் - கண்டெடுத்த துஷார ஜயவர்தன,
துஷார ஜயவர்தன, கடந்த புதன்கிழமை தம்புள்ளை நகரில் உள்ள கடைகளில் சில பொருள்களைக் கொள்வனவு செய்துள்ளார். வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவர் வாங்கிய பொருள்களுடன் அடையாளம் தெரியாத 2 பைகள் இருப்பதையும், அதற்குள் பெருமளவிலான பணம் இருப்பதையும் கவனித்து, பணம் யாருடையது என தெரியாத நிலையில், உடனடியாக தம்புள்ளை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று பணத்தை ஒப்படைத்துள்ளார்.
மேற்படி அரச உத்தியோகத்தர் பொருள்களை வாங்கிய கடைகளைத் தொடர்பு கொண்டு பொலிஸார் ஆய்வு செய்தனர். இதன்மூலம் பணப்பைக்கு உரியவர் தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் பொருளாளர் என்பது கண்டறியப்பட்டது.
குறித்த பணம் புனித ரமழான் மாதத்தில் சமயச் செயற்பாடுகளுக்காகச் சேகரிக்கப்பட்ட நன்கொடைப் பணம் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையில் அந்தப் பணம் உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.
அரச உத்தியோகத்தரின் இந்த முன்மாதிரியான செயலைப் பொலிஸாரும் பொதுமக்களும் பாராட்டியுள்ளனர்.

Post a Comment