பாகிஸ்தான் அணி நன்றி மறந்ததா..? இலங்கை கவலை தெரிவிப்பு
கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள அவர், பாகிஸ்தான் சவாலான நேரங்களை எதிர்கொண்டபோது, ஆபத்தைப் பொருட்படுத்தாமல் இலங்கை கிரிக்கெட் வழங்கிய ஆதரவை அவர்கள் மறந்துவிட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அரசாங்கம் எடுத்த இந்த முடிவு குறித்து இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அனுப்பிய கடிதத்தில், பெப்ரவரி 15 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருந்த இப்போட்டி குறித்து இலங்கை ரசிகர்கள் மட்டுமன்றி, இந்திய மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அப்போட்டிக்குத் தேவையான அனைத்து வர்த்தக நடவடிக்கைகள், சேவை விநியோகங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததாக இலங்கை கிரிக்கெட் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசேடமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளுக்கு அதிக கேள்வி நிலவியதாகவும், அந்த நுழைவுச்சீட்டுகள் வேகமாக விற்பனையாகி வந்ததாகவும் இலங்கை கிரிக்கெட் தலைவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு வேறு எந்தப் போட்டிக்கும் இல்லாத வகையிலான மக்கள் உற்சாகம் காணப்பட்டதாகவும், இலங்கை கிரிக்கெட் சபைக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் வர்த்தக ரீதியாக இப்போட்டியினால் பாரிய நன்மை கிடைத்திருக்கக் கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள எந்தவொரு போட்டியும் ரத்துச் செய்யப்படுவதானது, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குப் பாரிய நிதி நட்டத்தை ஏற்படுத்துவதுடன், நாட்டிற்கு எதிர்பார்த்திருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை கிரிக்கெட் தலைவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Post a Comment