பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவோம் - அனைவருக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி
சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான (AML/CFT) சர்வதேச தரநிலைகள் குறித்து இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
அரசாங்கம் என்ற வகையில், வெளித் தரப்பினருக்கு நமது தூய்மையை எடுத்துக் காட்டுவதற்கு முன், நாம் நமக்குப் பொறுப்பாகவும், சிறந்த ஆட்சியை நிலைநிறுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காக நிறுவன மட்டத்தில் நமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவோம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
நிலவும் சட்ட ரீதியான தடைகள் மற்றும் சட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள தாமதங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, அந்த விடயங்களை தாமதப்படுத்தாமல் தேவையான தொழில்நுட்ப திருத்தங்களை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினார்.
பல அரச நிறுவனங்களில் மனிதவளப் பற்றாக்குறை மதிப்பீட்டுச் செயல்முறைக்குத் தடையாக உள்ளதாகத் தெரியவந்ததோடு, தற்போதுள்ள அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்குமாறும், நிர்வாக தாமதங்களைத் தவிர்க்க, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

Post a Comment