Header Ads



புனித ரமலான் மாதத்தில் சர்புதீன் - சப்னா தம்பதியரின் நெகிழ்ச்சியான செயல்


"மன்னிப்பின் மாதம் ரமலான்" இந்தியா  மலப்புறம் மாவட்டத்தை சேர்ந்த  சர்புதீன் - சஃப்னா தம்பதியர். மகன் 2  வயது ஆண்குழந்தை  அய்லன் ரூமி.  இருவருக்கும் திருமணம் முடிந்து  8  ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் ஒட்டுமொத்த குடும்பமும் போற்றி வளர்த்த பாசமகன் அய்லன்.


ஷார்ஜாவில் பணியாற்றும் சர்புதீன்  கடந்த ஜனவரி 18ம் தேதி விசிட் விசாவில் மனைவியையும் மகனையும் அழைத்து வந்த போது அவர்களுக்கு தெரியாது தங்கள் செல்ல மகனுக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று.


பிப்ரவரி 12ம் தேதி சர்புதீன் பணிக்கு சென்றிருந்த சமயம் தாய் சஃப்னா  குப்பை கொட்டுவதற்கு குடியிருப்பு  கீழ் பகுதியில் குழந்தையுடன் இறங்கி  குழந்தையை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு குப்பையை தொட்டியில் கொட்டிவிட்டு திரும்பிய கணநேரத்தில் அந்த துயர சம்பவம் அரங்கேறியது.


குழந்தை அய்லன் நிற்பது தெரியாமல்  பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்த  வேறொரு நபரின் கார் மோதியதில் குழந்தை அய்லன் உடலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்த்த சில நிமிடங்களில் வஃபாத் ஆன சோகமான சம்பவம் ஷார்ஜாவில் வசிக்கும் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது.


மறுநாள் குழந்தை அய்லன் ஜனாஸா ஷார்ஜாவில் அடக்கம் செய்யப்பட்டது.


குழந்தை மரணத்திற்கு காரணமான காரை ஓட்டிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


குழந்தையின் பிரிவு தம்பதியரை அதிகமாக பாதித்தது. இருவரும் அங்கு தனிமையில் இருப்பது துக்கத்தை அதிகரிக்கும் என்பதால் ஊருக்கு சென்று சிறிது காலம் குடும்பத்தோடு கழிக்க நண்பர்கள் வலியுறுத்தி அனுப்பி வைத்தனர்.


ஊர் திரும்பும் முன்பு தம்பதியர் இருவரும் யோசித்து எடுத்த முடிவு அவர்கள் இருவரின் இறையச்சத்துடன் கூடிய  மனித நேயத்தை பறைசாற்றுகிறது.


""தங்களின் குழந்தை மரணித்தது அசாதாரணமான விபத்து. மனப்பூர்வமாக நடந்த சம்பவம் அல்ல. தங்களின் குழந்தை மரணித்ததற்காக வேறொரு நபர் சிறையில் இருப்பதும் , அந்த நபரின் குடும்பம் ரமலான் மாதத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர் என்பதை உணர்ந்து, ஷார்ஜா காவல்நிலையம் சென்ற தம்பதியர் இருவரும் தங்களுக்கு புகார் இல்லை என்றும், குழந்தை மரணத்திற்கு காரணமான காரை ஒட்டிய நபரை மன்னித்து விட்டதாகவும்  எழுத்து மூலமாக ஆவணங்களில் கையெழுத்திட்டு வழங்கியது, அவர்களின்  உள்ளத்தை உருக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.


எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக. இதற்கு பகரமாக மக்கள் செல்வங்களை அதிகரித்து வழங்குவானாக 

Colachel Azheem

No comments

Powered by Blogger.