தசுன் ஷானக கூறிய முக்கிய கருத்துக்கள்
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தசுன் ஷானக, அணியின் தற்போதைய நிலை மற்றும் தோல்விக்கான காரணங்கள் குறித்துப் பல முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
போட்டிக்கு முன்னர் ஆடுகளம் சிறப்பாக இருக்கும் என்று தான் எதிர்பார்த்ததாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக மாறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பந்துவீச எடுத்த முடிவின் அடிப்படையில், ஆடுகளத்தின் தன்மை தங்களுக்குச் சாதகமாக அமையவில்லை என அவர் தெரிவித்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் கடைசி 4 ஓவர்களில் 70 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தது, போட்டியின் போக்கையே மாற்றியதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
குறிப்பாக, முக்கியமான பந்துவீச்சாளர்கள் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தத் தவறியதும், ஒரு கட்டத்தில் பந்துவீச்சாளர்கள் பதற்றமடைந்ததும் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன என தெரிவித்த அவர், இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாகச் சோபிக்கத் தவறி வருவதை அவர் ஒப்புக்கொண்டார்.
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களே அணியில் உள்ளனர் என்றும், எனினும் சர்வதேச போட்டிகளில் உரிய வேகத்துடனும் திட்டமிடலுடனும் விளையாட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கை அணியின் தோல்விக்கு வீரர்களின் உடற்தகுதி (Fitness) ஒரு முக்கிய தடையாக இருந்ததை ஷானக வெளிப்படையாகக் கூறினார்.
இந்தத் தொடரின் போது 4 முதல் 5 முக்கிய வீரர்கள் காயமடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், சர்வதேச அளவில் போட்டியிட உடற்தகுதி மிக முக்கியமானது என்றும், வருங்காலத்தில் இதற்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களிலும் வெளியிலும் நிலவும் எதிர்மறையான விமர்சனங்கள் வீரர்களின் மனநிலையைப் பாதிப்பதாக அவர் கவலை தெரிவித்தார்.
வீரர்கள் தங்களால் இயன்றவரை சிறப்பாக விளையாட முயற்சித்த போதிலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில் வெற்றிகளைப் பெற்றுத் தர முடியாமல் போனது குறித்து அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
தனது எதிர்காலத் தலைமைப் பொறுப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், அது குறித்துத் தேர்வாளர்களே முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்.
ஒரு தலைவராக இலங்கை அணியை உலகக் கிண்ணத்தில் வழிநடத்தியது குறித்துத் தான் பெருமையடைவதாகவும், கடினமான சூழல்களிலும் தனக்கு ஆதரவு வழங்கியவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment