Header Ads



78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்இய்யத்துல் உலமா வழங்கும் செய்தி


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எமது தாய்நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.


சுதந்திரம் என்பது நீதியை நிலைநாட்டுதல், ஒற்றுமையைப் பேணுதல், பரஸ்பர மரியாதையையும் பொறுப்புணர்வையும் காத்தல் ஆகியவற்றை எம்மிடம் வலியுறுத்தும் ஒரு புனிதமான நம்பிக்கையாகும். பல மதங்களும் பல இனங்களும் இணைந்து வாழும் நாடாகிய இலங்கை, அமைதியான இணைந்த வாழ்வு, உயர்ந்த நெறிமுறைகள் மற்றும் தேசிய ஒற்றுமை, முன்னேற்றம் ஆகியவற்றிற்கான கூட்டு அர்ப்பணிப்பின் மூலமே தனது பலத்தைப் பெறுகிறது.


தாய்நாட்டை மதித்தல், நீதியான சட்டங்களைப் பின்பற்றுதல், சமூக நீதியை ஊக்குவித்தல், சமூக நலனுக்காக நேர்மறையாக பங்களித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இஸ்லாம் போதிக்கிறது. இவ்வுணர்வின் அடிப்படையில், அனைத்து சமூகங்களையும் குறிப்பாக இளைய தலைமுறையினரை நெறிமுறைமிக்க நடத்தை, பன்மைத் தன்மைக்கு மரியாதை, நிலையான அபிவிருத்தி, நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்படுமாறு நாம் அழைக்கின்றோம்.


சாதி, இனம், மதம் என்ற பேதமின்றி எமது சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதற்காக தியாகங்களையும் அர்ப்பணிப்பையும் மேற்கொண்ட அனைத்து துறைகளையும் சேர்ந்த தலைவர்களையும் தேசபக்தர்களையும் ஆழ்ந்த நன்றியுடன் இந்நாளில் நினைவுகூருகின்றோம்.


எமது முன்னோர்கள், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சுதந்திரத்தை ஒவ்வொரு குடிமகனும் அனுபவிக்கும், மரியாதை, கௌரவம் மற்றும் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசத்தை கனவுகண்டு, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக அயராது உழைத்தனர்.


இந்தச் சூழலில், நவீன உலகளாவிய அபிவிருத்திகளுடன் ஒற்றுமையோடு நாட்டை முன்னோக்கி வழிநடத்தும் அதே வேளையில், இந்த நாட்டின் மத மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் அரசாங்கங்களுக்கு உள்ளது.


இந்த நாட்டின் குடிமக்களாகிய நாம் அனைவரும், எதிர்காலத் தலைமுறைகளுக்காக எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த விலைமதிப்பற்ற சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொண்டு, இலங்கையின் முன்னேற்றத்திற்கும் செழிப்பிற்கும் ஒன்றிணைந்து பாடுபடுவோமாக.


சர்வ வல்லமை பெற்ற அல்லாஹ் (சுப்ஹானஹு வ தஆலா) எமது தாய்நாட்டிற்கு நீடித்த அமைதி, நிலைத்த தன்மை, ஒற்றுமை மற்றும் செழிப்பை அருள்வானாக!


முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளார்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.