நான் புகழ்தேட விரும்பவில்லை..
அது செப்டம்பர் 16, 1976ஆம் ஆண்டு. நீச்சலில் உலக சாம்பியன் ஷவர்ஷ் கரபெட்யன், ஆர்மீனியாவில் பயிற்சிக்காக ஓடிக்கொண்டிருக்கும்போது ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டார். ஒரு மின்சார டிராலிபஸ் அணையின் ஏரியில் விழுந்தது.
என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் சுற்றி திரண்டிருந்தபோது, தயக்கமோ பயமோ இல்லாமல், 23 வயதான ஷவர்ஷ் சம்பவ இடத்திற்கு ஓடி, தனது ஆடைகளைக் கழற்றி, மாசுபட்ட நீரில் குதித்து முடிந்தவரை பலரைக் காப்பாற்றினார்.
தண்ணீருக்கு அடியில் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஷவர்ஷ் 15 அடி ஆழத்திற்கு டைவ் செய்தார். மூடப்பட்டிருந்த பின்புற ஜன்னலை உதைத்தார். இதனால் அவரது கால்கள் காயமடைந்தன. அடுத்த 20 நிமிடங்களில் ஷவர்ஷ் 37 பேரை மீட்டார். அவர்களில் 20 பேர் உயிர் பிழைத்தனர். ஒன்பது பேர் உடைந்த ஜன்னல் வழியாக தப்பினர்.
ஆனால் அதன்பிறகு ஷவர்ஷ் கடுமையான நுரையீரல் பாதிப்புக்கு உள்ளாகி, நடக்கக்கூட முடியாமல் மூன்று வாரங்கள் மருத்துவமனையில் தங்கினார். அந்த வருடம் அவரால் நீச்சல் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை.
இந்த நிகழ்வு பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டது. ஏனெனில், சோவியத் யூனியன் பேருந்து விபத்தை வெளிப்படுத்த தயங்கியது.
இது தொடர்பாக ஷவர்ஷ் கூறுகிறார்: "அந்த நிகழ்வை வைத்து நான் புகழ்தேட விரும்பவில்லை. அந்த மக்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்று மட்டுமே நான் விரும்பினேன். சம்பவத்திற்குப் பிறகு, என் நுரையீரலுக்கு ஏற்பட்ட சேதத்தால் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தேன். ஆனால் அதற்காக நான் ஒருபோதும் வருத்தப்படவில்லை."
"அந்த நேரத்தில் உங்களுக்கு பயமாக இருக்கவில்லையா?” என்று கேட்டபோது,
அவர் கூறிய பதில்தான் உண்மையான வீரத்தையும் பொறுப்பு உணர்வையும் பிரதிபலிக்கிறது:
"பயப்படுவதற்கு நேரம் இருக்கவில்லை. அது விரைவாக முடிவெடுக்க வேண்டிய நேரம். அந்த நேரத்தில் நான் அதைச் செய்யாவிட்டால், வேறு யாரும் அதைச் செய்ய மாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும். தவறு செய்துவிடக் கூடாதே என்று மட்டுமே பயந்தேன். நீருக்கடியில் கருமையாக இருந்தது. என்னால் எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஜன்னல்களை உடைத்தபிறகு கடைசியாக கையில் கிடைத்த ஏதோ ஒன்றைப் பிடித்து பலமாக இழுத்தேன். அது மனிதர் என்றுதான் நினைத்தேன். ஆனால் அது ஒரு பேருந்து இருக்கை.
அந்த இருக்கை இன்றுவரை கனவுகளில் என்னைத் துரத்துகிறது. இருக்கைக்குப் பதிலாக அது ஒரு மனிதராக இருந்திருக் கூடாதா என்று இப்போதும் நான் ஏங்குகிறேன்" என்று அவர் கண்ணீருடன் கூறினார்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு இரண்டு பந்தயங்களில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்று, அவரது உலக சாதனையை அவரே முறியடித்தார்.
பிறருக்கு உதவி தேவைப்படும் இக்கட்டான நேரத்தில் நம்மில் சிலர் சொல்வதுண்டு: 'நான் சாதாரணமானவன். என்னால் எப்படி உதவ முடியும்?’
அதே நேரத்தில் ஷவர்ஷ் போன்றவர்கள், "என்னைவிட்டால் வேறு யார்?" என்று கேட்கிறார்கள்.
வெளிப்படுத்த வேண்டிய வேளையில் வெளிப்படுத்துவதுதான் வீரம். சக மனிதனுக்கு ஒரு புதிய வாழ்க்கையை வழங்குவதுதான் வீரம்.
வேடிக்கை மனிதர்களல்ல நாம்!
✍️ நூஹ் மஹ்ழரி

Post a Comment