வெள்ள நீரினால் நனைந்த அல்குர்ஆன் பிரதிகளை எவ்வாறு கையாள வேண்டும்..?
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலாத்தும், ஸலாமும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
அல்-குர்ஆன் மனிதர்களுக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காக அல்லாஹ்வால் அருளப்பட்ட புனித வேதமாகும். அதன் கட்டளைகளை ஏற்று நடப்பதும், அதனைக் கண்ணியப்படுத்துவதும் பாதுகாப்பதும் மனிதர்கள் மீது கடமையாகும். அதில் அசுத்தம் பட்டால் கூட அதனை சுத்தம் செய்து பாதுகாப்பதையே மார்க்கம் வலியுறுத்துகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் எமது நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் வீடுகளிலும், மஸ்ஜித்களிலும் இன்னும் சில இடங்களிலும் இருந்த அல்-குர்ஆன் பிரதிகள் நனைந்து பாவிக்க முடியாத நிலைய அவதானிக்க முடிகிறது. எனவே, இதுவிடயத்தில் பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கின்றது.
1. பயன்பாட்டிற்குத் தகுதியான நிலையில் உள்ள பிரதிகள்:
பயன்படுத்தக்கூடிய அளவில் இருக்கும் அல்-குர்ஆன் பிரதிகளைச் சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.1 தேவையானால் துறைசார்ந்தவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு, பொருத்தமான ‘Freezer’ போன்றவற்றில் வைத்து பாதுகாப்பாகச் சுத்தம் செய்யலாம்.
2. எழுத்துக்களை கரையச் செய்தல்:
பயன்படுத்தவே முடியாத நிலையில் உள்ள அல்-குர்ஆன் பிரதிகளைச் சுத்தமான நீரில் நன்றாக எழுத்துக்கள் கரையும்வரை கழுவுதல். அதன் பின்னர், கழுவிய நீரை சுத்தமான இடமொன்றில் கொட்டிவிடலாம்.2
3. எரித்துப் புதைத்தல்:
பயன்படுத்தவே முடியாத அல்-குர்ஆன் பிரதிகளை ஒன்றுசேர்த்து சுத்தமான இடமொன்றில் எரிக்கலாம். ஈரமான பிரதிகளை எரிப்பதற்கு தேவையானால் பொருத்தமான இரசாயனப் பொருட்களையும் பயன்படுத்தலாம். எரிக்கப்பட்ட பாகங்களை பின்னர் சுத்தமான இடமொன்றில் புதைத்தல்.3
4. புதைத்தல்:
பயன்படுத்தவே முடியாத நிலையில் உள்ள அல்-குர்ஆன் பிரதிகளை, மக்கள் நடமாட்டம் இல்லாத சுத்தமான பகுதியில், ஒரு பொருத்தமான பெட்டியில் வைத்து புதைக்கலாம்.4
மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை, யாரால் தமது வீட்டின் அருகில் தனிப்பட்ட முறையில் செய்ய இயலுமோ, அவர்கள் மேற்சொல்லப்பட்டபடி செயல்படுவதுடன் இவ்வாறு தனிப்பட்ட முறையில் செய்ய இயலாதவர்களானால், அவற்றை ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் ஒன்றுசேர்த்து, சம்பந்தப்பட்ட தங்களது கிளை ஜம்இய்யாவின் ஆலோசனையைப் பெற்று செயல்படுமாறும் ஜம்இய்யா வேண்டுகின்றது.
அத்துடன், இதுகுறித்து மேலதிக ஆலோசனைகள் தேவையானால், ஃபத்வாப் பிரிவின் துரித இலக்கத்தை 0117490420 தொடர்பு கொள்ளலாம்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
அஷ்-ஷைக் எம்.ரீ.எம். ஸல்மான்
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
முஃப்தி எம்.ஐ.எம் ரிழ்வி
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Post a Comment