Header Ads



கல்முனையை காவு கொள்ளும் கடல்


- நூருல் ஹுதா உமர் -


சமீபத்தில் ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக கல்முனை பிரதேசத்தின் பல கரையோரப் பகுதிகள் கடலில் மூழ்கிக் கொண்டிருப்பது உள்ளூர் மக்களிடையே அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக பல நாட்களாக கடல் அலைகள் அதிகரித்துள்ளதால் கரையோர மணற்பரப்புகள், மீனவர்களின் உபகரணப் பகுதிகள் மற்றும் சில அபிவிருத்தித் திட்டங்கள் கடலுக்குள் செல்லும் நிலை உருவாகியுள்ளது.


கல்முனை பகுதிகளில் கடலரிப்பு தீவிரமடைந்த நிலையில், கரையோரம் சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களும் நேரடியாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. குறிப்பாக கரையோர பாதுகாப்பு கற்சுவர் பாதிக்கப்பட்டது, சில இடங்களில் முழுமையாக இடிந்தது. இதனால் கடல் அலைகள் வீதிகளுக்குள் திடீரென நுழைவதற்கான சூழல் உருவாகியுள்ளது.


பெரும்பாலான மீன்பிடி குடும்பங்கள் தற்போது வாழ்வாதார சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. கடலரிப்பால் மீன்பிடி படகுகள் கரையோரத்தில் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். “நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் கடலரிப்பை எதிர்கொள்கிறோம்; ஆனால் இம்முறை ஏற்பட்ட சேதம் அதிகம். கரையோரம் கண்முன்னே கடலில் கரைகிறது,” என உள்ளூர் மீனவர் ஒருவர் வருத்தம் தெரிவித்தார்.


அதுமட்டுமல்லாமல், கரையோர அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்படும் போதே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயங்களை கணக்கில் கொண்டு நிலைத்த திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்


கடந்த சில ஆண்டுகளில் கல்முனை கரையோரத்தில் தொடர்ச்சியான மணற்பரப்பு இழப்பு இடம்பெற்று வருகின்றது. இதனால் இயற்கை வாழ்விடங்கள் மட்டுமின்றி, சமூக-பொருளாதார நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. கடற்பரப்பு மேலெழும் சூழல், மோசமான வானிலை மாற்றங்கள், திசைமாறும் அலைகள் ஆகியவை இந்த பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.


கல்முனை கரையோர மக்கள் தற்போது கடலுக்கு எதிரான போராட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கருதுகின்றனர். அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சு, திணைக்களம் என்பன விரைந்து செயல்பட்டு நிலையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமிருந்தும் வலுப்பெற்று வருகிறது.

No comments

Powered by Blogger.