பௌத்த சமூகத்தை தூண்டி, கோபத்துக்குள்ளாக முயற்சிக்கப்படுகிறது - ஞானசாரர்
பௌத்த சிங்கள சமூகத்தை தூண்டி கோபத்துக்குள்ளாக முயற்சிக்கப்படுகிறது. எனவே இளம் பிக்குகள் மற்றும் தேசிய அமைப்புகள் அமைதியாகவும் விழிப்புணர்வுடனும் இருக்கும் அதேவேளை, மீண்டும் தனி ஈழத்துக்கு பாதை அமைப்பதற்கு இடமளித்து விடக் கூடாது என ஞானசார தேரர் தெரிவித்தார்.
இராஜகிரியவிலுள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் பௌத்தர்களின் உணர்வுகளைத் தூண்டும் ஒரு மிக முக்கியமான பிரச்சினையாகும். இதுபோன்ற விஷயங்களைக் கையாளும் போது அரசாங்கம் விவேகத்துடனும் தூரநோக்குடனும் செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் பல்வேறு குழுக்களும் சக்திகளும் தமது தேவைக்கேற்ப நிலைமையைக் கையாள இது வழிவகுக்கும்.
பௌத்த சிங்கள சமூகத்திலிருந்து வரும் ஆரவாரமும் கோபமும், அதிதீவிரவாதத்தின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களால் தமக்கான தீவிரவாத கருத்துகளுக்குத் தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களை விரைவாகச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்றார்

Post a Comment