Header Ads



இவரது பெயர் இப்போது போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் பட்டியலில் இல்லை...


உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர்தான் சவூதி அரேபியாவின் சுலைமான் அல்ராஜிஹ். உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் (Forbes) பத்திரிகை பலமுறை இவரது பெயரை வெளியிட்டுள்ளது.


ஆனால் இப்போது அந்தப் பட்டியலில் இவரது பெயர் இல்லை. காரணம்? தமது திரண்ட செல்வத்தில் கிட்டத்தட்ட 16 பில்லியன் டாலரை நன்கொடையாக அளித்து உலகையே திகைக்க வைத்தார். இது வரலாற்றில் மிகப்பெரிய தனிநபர் நன்கொடைகளில் ஒன்றாகும்.


ஒரு பில்லியன் என்பது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 100 கோடி. அவர் பணத்தை மட்டும் கொடையாகக் கொடுக்கவில்லை. மாறாக உலகின் மிகவும் லாபகரமான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றான அல்ராஜிஹ் வங்கியின் பங்குகள், ரியல் எஸ்டேட்கள், வணிகங்கள், கோழிப் பண்ணைகள், அல்ராஜிஹ் பல்கலைக் கழகம் மற்றும் பலவற்றையும் நன்கொடையாக வழங்கினார்.


அவரது திரண்ட செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கு சொத்துக்கள் இஸ்லாமியச் சேவை, கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக 'வக்ஃப்’ செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவை அவரது பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 


இது குறித்து கேட்டபோது, "அனைத்தையும் நான் அல்லாஹ்வுக்காகக் கொடுத்தேன்” என்று ஒற்றை வரியில் பதில் சொன்னார். வறுமையில் பிறந்த அவர் கோடீஸ்வரராக மாறுவதற்கு முன் சுமை தூக்கும் தொழிலாளியாகவும், கூரியர் பாயாகவும் பணியாற்றினார்.


இல்லாமையில் இருந்து அவரது செல்வத்தை உருவாக்கினார். இப்போது இல்லாதவர்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்கிறார். சுலைமான் அல்ராஜிஹின் கதை வெறும் தானதர்மம் பற்றியது அல்ல. மாறாக..


உண்மையான வெற்றி எது என்பது பற்றியது. பேராசை எனும் வெறியை உடைத்தெறிவது பற்றியது. ஏழைகளை மேம்படுத்த செல்வத்தைப் பயன்படுத்துவது பற்றியது.


கோடிக்கணக்கான செல்வங்கள் தொடப்படாமல் அப்படியே இருக்க; கோடீஸ்வரர்கள் அப்படியே இறந்து போகும் இந்த உலகில்.


சுலைமான் அல்ராஜிஹ் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஆம். வாழும்போதே மற்றவர்களுக்கு வாரி வழங்கினார். இதனால்தான் இவரது பெயர் இப்போது போர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் பட்டியலில் இல்லை. 


மனிதர்களின் பட்டியலில் அவரது பெயர் இல்லாமல் இருக்கலாம். அதனால் என்ன? வாரி வழங்கும் வள்ளலான அல்லாஹ்வின் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருக்குமே.


✍️ நூஹ் மஹ்ழரி

No comments

Powered by Blogger.