யார் இவர்..?
"32 இலட்சம் ரூபாயில் விருந்து..."
அவர் ஒரு புகழ்பெற்ற மார்க்க அறிஞர். ஒரு முறை மக்கள் அவருக்கு இரவு விருந்து அளிக்க முன் வந்த போது அதற்கு 32 இலட்சம் ரூபாய் செலவாயிற்று. அந்த ஆலிம் பெருந்தகை அதனை வீண் செலவாகவே நினைக்கவில்லை. அதற்கும் மேலாக அதனை தன்னுடைய நல்லறங்களின் பட்டியலில் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டார்கள்.
வியப்பாக இருக்கின்றதா? மேலே படியுங்கள்.
அவர் அமெரிக்காவில் இருந்த போதுதான் இந்த காஸ்ட்லியான இரவு விருந்து நடந்தது. அப்போதுதான் அவர் இஸ்லாமிக் சென்டரில் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தி அமர்ந்திருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் சில அரபுத் தோழர்களும் அரபு அல்லாத தோழர்களும் அவருக்கு இரவு விருந்து கொடுக்க போட்டி போட்டார்கள்.
எங்க வீட்டுக்குவாங்க..! எங்க வீட்டுக்கு வாங்க! என்று விண்ணப்பித்தார்கள். இவ்வாறு நிறைய பேர் விண்ணப்பித்ததைப் பார்த்த அவர், ‘இன்று எனக்கு இரவு விருந்து தருவதற்கு ஆர்வமாக இருப்பவர்கள் யார், யார்?’ என்று அறிவித்தார். 36 பேர் முன் வந்தார்கள்.
அடுத்து அந்த ஆலிம் பெருந்தகை வினவினார்: ‘என்னுடைய இரவு விருந்துக்காக நீங்கள் எவ்வளவு செலவிடப் போகின்றீர்கள்?’ எல்லோருமே ‘ஆயிரம் டாலர்கள்’ என்றார்கள்.
அமெரிக்காவில் அந்த நாள்களில் விருந்தினரை உபசரிப்பதற்காக அது தேவையானதை விட அதிகமானதாகவே இருந்தது. என்றாலும் நண்பர்கள், உறவினர்கள் என பலரையும் சேர்த்து விருந்து கொடுத்து ஜமாய்க்கலாம் என்று கணக்குப் போட்டார்கள்.
அந்த ஷேக் எல்லோரிடமும் ஆயிரம் டாலர்களை அப்போதே வசூலித்துவிட்டார். மொத்தம் 36 ஆயிரம் டாலர்கள் (32 இலட்சம் ரூபாய்கள்) சேர்ந்தன. மொத்தத் தொகையையும் இஸ்லாமிக் சென்டரின் வளர்ச்சிப் பணிகளுக்காக வழங்கிவிட்டார் அவர்.
அப்போதிருந்து ‘36 ஆயிரம் டாலர் விருந்துக்காரர்‘ என்று அவரைக் குறித்து மக்கள் பெருமையாகப் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
அந்த ஆலிம் பெருந்தகையின் பெயர் முஹம்மத் ஸஃப்வத் நூருத்தீன்(ரஹ்)
அல்லாஹ் அவருடைய நல்லறங்களை ஏற்றுக்கொள்வானாக. சுவனத்தின் உயர்ந்த சோலைகளில் சேர்த்துக் கொள்வானாக. ஆமீன்.
எழுத்து: வஸ்ஃபி அபூ ஜைத்
நன்றி: அபுல் அஃலா சுப்ஹானி

Post a Comment