Header Ads



நீர்கொழும்பில் மாணவர்களுக்கு நாசகார கஞ்சாவை விற்பனை செய்தவன் கைது - பிணையில் விடுவித்த நீதிமன்றம்


- இஸ்மதுல் றஹுமான் -


கஞ்சா கலந்த மதனமோதக வில்லைகளை பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மிகவும் இரகசியமாக விற்பனை செய்ததாகக் கூறப்படும் உள்ளூர் மருந்து விற்பனை நிலைய ஊழியரை  நீர்கொழும்பு பொலிஸார கைது செய்துள்ளனர்.


 மிக நீண்ட காலமாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


    இந்த மருந்து விற்பனை நிலையத்திற்கு அருகிலுள்ள பாடசாலை மாணவர்கள் அடிக்கடி வந்து செல்வதாகவும் அவர்கள் ரகசியமாக ஒரு வகை மாத்திரையை வாங்கி  கடையை விட்டு வெளியேறும்போது இந்த மாத்திரைகளை வாயில் போட்டுக் கொள்வதாகவும்  நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி திருமதி என்.எஸ். ஹசீமுக்கு  தகவல் கிடைத்தது.


  அதற்கினங்க நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பிரஜைகள் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி எம். ரோஹன, பொலிஸ் கான்ஸ்டபல்களான வீரசிங்க(31298), எதிரிசிங்க(35086) பெண் பொலிஸ் கான்ஸ்டபல் மனிஷா(7026) ஆகியர் அடங்கிய பொலிஸ் குழுவினர்   நீர்கொழும்பு, கடற்கரை தெருவில் அமைந்துள்ள குறித்த விற்பனை நிலையத்திற்கு ஒரு மூலோபாயவாதியை அனுப்பி இந்த வில்லைகளை விலைக்கு வாங்கிய போது  அங்கிருந்த  241 மதனமோதக வில்லைகளை கைபற்றினர். அவற்றில் சில காசாளரின் லாச்சிலும் இன்னும் சல  பாடசாலை பேக் ஒன்றிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 


      அங்கிருந்த செவனகல, தெனகமவைச் சேர்ந்து செஹான் சத்சர என்பவரை பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்தனர்.


              கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் ரகித்த அபேசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது சந்தேக நபரை 5 இலட்சம் ரூபா சரீரப் நிலையில் நீதவான் விடுவித்தார்.

No comments

Powered by Blogger.