Header Ads



நீர்கொழும்பில் குற்றங்கள் உயருகிறதா..?


- இஸ்மதுல் றஹுமான் -


         பாதால உலக குழுக்களின் செயல்பாடுகள் குறைவடைந்தாலும் போதைப் பொருள் அச்சுறுத்தல் அதிகரித்து கானப்படுகின்றது என நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிமல் பெரேரா நீர்கொழும்பு பொலிஸ் பிரதேச பிரஜா பொலிஸ் குழுக்களின் அங்கத்தவர்களின்  கூட்டத்தில் உரையாற்று போது தெரிவித்தார்.


        நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிமல் பெரேரா தொடர்ந்து உரையாற்றுகையில் 


நீர்கொழும்பு பொலிஸ் பிரதேசத்தில் 76,635 சிங்களவர்கள், 9630 தமிழர்கள், 14,000 முஸ்லிம்கள் ஏனையவர்கள் 1000 என 102,000 பேர்கள் வசிக்கின்றனர். 23 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடக்கிய பொலிஸ் பிரதேசத்தில் 170 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் உள்ளனர்.


       சனநெறிசல் மிக்க பிரதான நகரமான இங்கு பல்வேறுபட்ட அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள், நீதிமன்றத் தொகுதி, சிறைச்சாலை, வங்கிகள், பாடசாலைகள், சகல மத ஸ்தானங்களும் உள்ளன. சகல இன மக்களும் வாழும் பிரதேசம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் பகுதி, பெரும்பாலானவர்கள் கடற்தொழிலில் ஈடுபடுகின்றனர். இங்கு அச்சுறுத்தல்கள், குற்றச் செயல்கள் அதிகம் காணப்படுகின்றன. பாதுகாப்பும் அதிகம் தேவை. மக்களிடமிருந்து பொலிஸாருக்கு தகவல்கள் கிடைப்பதில்லை  இதற்காக பிரஜா பொலிஸ் குழுவினரின் ஒத்துழைப்பு அவசியம். 


    உங்கள் பக்கத்து வீடு, நீங்கள் வசிக்கும் வீதி, கிராமம் தொடர்பாக உங்களுக்கு அதிகம் தெரியும். வெளியிலிருந்து வருபவர்கள் யார் ?, எமக்கு அச்சுறுத்தலாக இருப்பது என்ன? என்பது பற்றிய தகவல்களை உங்களுக்கு தரமுடியும். பொலிஸாரின் கடமைதான் பொதுமக்களின் பாதுகாப்பாகும்.


       எவராவது வீட்டிலிருந்து வெளியே சென்றால் மீண்டும் வீடுவந்து சேரும்போது அங்கே எதுவித அசம்பாவிதமும் நடைபெறாது என்ற நிலமையை  ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த பாதுகாப்பே எமக்குத் தேவை. அதுவே சரியான கடமையின் அறிகுறியாகும்.


      எமது பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அர்பணிப்புடன் சேவை செய்கின்றனர். சில குறைபாடுகள் இடம்பெறுவதும் உண்டு. தவறான செயல்களில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் பற்றியும் தகவல் தரவேண்டும். கடமையை உரிய முறையில் செய்யத் தவறுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். தேவையென்றால் சேவையில் இருந்து நீக்கவும் முடியும்.


     எமது பிராந்தியத்தில் உள்ள அச்சுறுத்தல் என்ன என்பதை அடையாளம் காணவேண்டும். இவ்வருடத்தில் இப் பிராந்தியத்தில் 8 கொலைகள் இடம்பெற்றுள்ளன. கடைசியாக நீர்கொழும்பில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கொலை ஒன்று நிகழ்ந்தது.  கட்டான பகுதியில் தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுத்து ஜந்து இலட்சம் ரூபா பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. உயிர் ஆபத்தின் காரணமாக பணத்தை வைப்பிலிட்டதாக தெரியவந்துள்ளது. அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து சிறைக்கைதி ஒருவரே இந்த தொலைபேசி அச்சுறுத்தல் விடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறான செயல்பாடுகளுக்கு ஆலாக வேண்டாம் என மக்களை அறிவுறுத்த வேண்டும்.


      பாதால உலக குழுக்களைச் சேர்ந்த ஆறு பேர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட பின்னரும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர்கள் பிடிப்பதற்காக சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதனால் பாதுகாப்பு கருதி அவர்கள் மறைய வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. பாதால குழுக்களுக்கு எதிரான செயல்பாடுகளினால் அவர்களின் செயல்பாடுகள் படிப்படியாக குறைவடைகின்றன.


     நான்கு கிராமுக்கு குறைவான போதைப் பொருள் வழக்குகள் தினமும்  4-5 விசாரிக்கப்படுகின்றன. பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கக் கூடிய வழக்குகள் 20-25 வரை இடம்பெறுகின்றன. இந்த பிராந்தியத்தில் எந்த நாளும் 4-5 பேர் சிறை வைக்கப்படுகின்றனர். இதனால் சிறைச்சாலைகளில் இடநெருக்கடியும் ஏற்பட்டுகின்றன. இதில் குறைவு ஏற்படுவதாக தென்படவில்லை.   


      பாதாலக் குழுக்களில் நடவடிக்கைகள் குறைந்தாலும் போதைப் பொருள் அச்சுறுத்தல் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்கிறது.


         ஆரம்பத்தில் ஹெரோய்ன் பாவித்தார்கள் தற்போது ஐஸ் பாவிக்கிறார்கள். 4,5 வருடங்கள் போதைப் பொருளை பாவிக்கும் போது இறுதியில் உயிரிழப்பு ஏற்படுகிறது. 


    சிறைச்சாலைகளில் கிழமைக்கு 2-3 மரணங்கள் இடம்பெறுவதை அறிகிறோம். ஐஸ் பாவித்தவர்கள் சிறையில் இருக்கும் போதே மரணமடைகிறார்கள். இவ்வாறு மரணிப்பவர்கள் முதியவர்கள் அல்ல. 50 வயதிற்கும் குறைந்தவர்கள் என்பது கவலைக்குறிய விடயமாகும். நாட்டின் சிறந்த பிரஜைகளாக உருவாக வேண்டிய வயதில் வீனாக மரணிக்கின்றனர். இது அபிவிருத்தி அடைந்துவரும் எமது நாட்டுக்கு அச்சுறுத்தலாகும்.


   போதைக்கு அடிமையாகுவதால் சமூகத்திற்கு ஏற்படும் விபரீதங்கள் பற்றி சிந்திக்க வேண்டும். இதனைத் தடுப்பதற்காக மக்களை அறிவுறுத்தும் பாரிய வேலை திட்டங்களை செய்வது எமது கடமையும் பொறுப்புமாகும். பாதால உலகத்திற்கு அடுத்தபடியாக உள்ள அச்சுறுத்தல் போதைப் பொருளாகும். போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனருத்தாபனம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்.


      நீர்கொழும்பில் "ஸ்மங்லிங்" சட்டவிரோத வியாபாரமும் சுலபமாக நடைபெறுகிறது. போதைப் பொருட்கள், பீடி இலைகள், இரசாயண பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களும் சட்ட விரோதமான முறையில் கொண்டுவரப்படுகின்றன.  சிலர் இதனை தொழிலாகச் செய்கின்றனர். இதன் மூலம் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். படகுகளில் இவற்றை எடுத்து வருவதற்கு ஒரு இலட்சம் ரூபா வழங்குகிறார்கள். அதில் 50 ஆயிரம் ரூபாவிற்கு ஐஸ் எடுத்து வருகிறார்கள். கரையிக்கு கொடண்டுவரும் போது பொலிஸார் எங்கு உள்ளார்கள் என்று வேவு பார்த்து தகவல் வழங்குவதற்கு ஒருவருக்கு பத்தாயிரம் ரூபா வீதம் கொடுக்கிறார்கள். இவர்களுக்கு உதவி செய்யும் சில பொலிஸாரும் உள்ளனர்.


     10-15 அடி உயரத்திற்கு மதில்களை கட்டி றோலர் கேட்டுகளை அமைத்து வாழ்கிறார்கள். அங்கு என்ன நடைபெறுவது என்று பக்கத்து வீட்டாருக்குத் தெரியாது. இவை தொடர்பாகவும் நாம் கவணமாகவும் உண்ணிப்பாகவும் இருக்கவேண்டும்.


   இந்தப் பிரதேசம் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வருகை தரும் பிரதேசமாகும். சுற்றுலா துறையின் போர்வையில் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது. "ஸ்பா" என்ற அறிவித்தல் பலகைகளை காட்சிப்படுத்தி விபசார விடுதிகள் நடாத்த அனுமதிக்க மாட்டேன்.


     ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான முறையில் செயல்பட முடியாது. பொலிஸார் அவர்களின் கடமைகளை உரிய முறையில் செய்ய வேண்டும். பொலிஸார் பிழை செய்தால் என்னை அறிவுறுத்துங்கள். என்னில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் எனக்கு மேலால் உள்ள அதிகாரிகள் அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு முறையிடலாம்.


    சட்ட விரோத செயல்பாடுகளுக்கு எதிராக நாம் எடுக்கும் நடவடிக்கையை தடுப்பதற்கோ அல்லது அதற்கு பலவந்தம் செய்வதற்கோ இந்த அரசாங்கத்தில் யாரும் முன்வர மாட்டார்கள்.


     அவசியமான செயல்களை சரியாக செய்து சமூகத்தை சிறந்த முறையில் வழிநடாத்த முடியுமாக இருந்தால் அதுவே நாம் பெற்ற வெற்றியாகும் என்றார்.

No comments

Powered by Blogger.