தண்டனை பெற்ற மாணவர்கள், பாடசாலையை விட்டு விலகிய சம்பவங்களே அதிகம்
அத்தகைய உடல் ரீதியான தண்டனைகள் மூலம், வன்முறை, திருட்டு போன்ற சமூக விரோத எண்ணங்கள் மாணவர்கள் மத்தியில் உருவாகின்றன. அத்துடன், பிழையான வழிகளில் செல்லுதல், ஆக்ரோஷமான மற்றும் குழப்பமான மனவெழுச்சிகளும் நடத்தைகளும் உருவாகுதல், ஆசிரியர்–மாணவர் இடையிலான தொடர்பு படிப்படியாக விலகுதல் போன்ற விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
தோல்வி மனநிலை உருவாகி, சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒருவராக மாணவர்கள் மாறுவதற்கும் அதிக வாய்ப்புகள் தோன்றுகின்றன. பிற்காலத்தில் இத்தகைய மாணவர்கள், பொதுச் சொத்துகளை அழிப்பவர்களாக மாறுவதுடன், அவர்களின் அடிப்படை கல்வியறிவைப் பெறும் வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன.
தண்டனை பெற்ற மாணவர்கள் நல்ல நிலைக்கு வந்தார்கள் என்பதை விட, தண்டனையால் மாணவர்கள் பாடசாலையை விட்டு விலகிய சம்பவங்களே அதிகம் காணப்படுகின்றன. எனவே, மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு உடல் ரீதியான தண்டனையளித்தல் பொருத்தமற்றதாகும். இதற்காகவே, தண்டனைச் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் மாணவர்களுக்கு எந்த இடத்திலும் அடிப்படை மனித உரிமை மீறல் ஏற்படாத வகையில் சட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் விருப்பத்துடன் பாடசாலைக்கு செல்வதை விட தண்டனைக்குப் பயந்தே பாடசாலைக்கு செல்வதைக் காண முடிகிறது.
எனவே, தண்டனைக்குப் பயந்து நடுங்கும் மாணவர் சமூகத்திற்கு மாற்றாக, சுய ஒழுக்கம் மற்றும் தன்நம்பிக்கையுடன் கூடிய மாணவர்களை உருவாக்குவதற்காகவே இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்படுவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பாராளுமன்றத்தில் தெரிவிததுள்ளார்.

Post a Comment