ஜெனீவாவில் இலங்கை பற்றிய அறிக்கையை சமர்ப்பித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஆற்றிய உரை
மாற்றத்தக்க சீர்திருத்தம், பொறுப்புக்கூறல், உண்மை மற்றும் நீதி ஆகியவற்றிற்காக நாடு முழுவதிலுமிருந்தும், அரசாங்கத்திற்கு தெளிவான ஆணை கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக அறிக்கையை சமர்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
இதனிடையே அண்மையில், தாம், இலங்கைக்கு விஜயம் செய்த போது, நாட்டின் மிக நீண்டகால பிரச்சினைகளுக்கு, புதிய திசை நோக்கிய பயணத்திற்கு, அந்த நாட்டின் தலைமை உறுதியளித்துள்ளதாகவும் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், புதிய அணுகுமுறை, ஒத்திசைவானதும், காலக்கெடுவை வழங்கக்கூடியதாகவும் அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொறுப்புக்கூறல், நீதியை வழங்குதல், நீண்டகாலமாக இலங்கை மக்கள் அனுபவித்துவரும் அரசியல் ரீதியான பாகுபாடுகள் மற்றும் பிரிவினையை நீக்குதல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்
அவையே,எதிர்கால குணப்படுத்துதல், நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதியை வளர்ப்பதற்கு அவசியமானவை என்றும் வோல்கர் ட்ர்க் தெரிவித்துள்ளார்.
தமது இலங்கை பயணத்தின்போது, மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ச்சியான துன்பங்களை தாம் நேரடியாக கண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
செம்மணி மனித புதைகுழியில், தமது ஒரு அன்பானவரின் இழப்பை தாங்கிக்கொள்ளாத துக்கத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தைச் தாம் சந்தித்ததாக குறிப்பிட்ட டர்க், தென் மாகாணத்தை ஒரு பெண்ணும் 30 ஆண்டுகளுக்குப் பிறகும் தனது கணவரைத் தேடி வருவதாக தம்மிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்
தண்டனையிலிருந்து விலக்கு என்பது, இரண்டாவது வன்முறை வடிவமாகும்.
இது தீங்கு சுழற்சிகளை நிலைநிறுத்துகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கவனிக்கப்பட வேண்டும்.
அவர்களின் குரல்கள் பொறுப்புக்கூறல், உண்மை, நீதி மற்றும் இழப்பீடு குறித்த அரசாங்கத்தின் கொள்கைகளை வழிநடத்த வேண்டும்.
அத்துடன், உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் உட்பட மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை முறையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.
அரசு மற்றும் அதன் பாதுகாப்புப் படைகள் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
அவர்கள் செய்த உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்களின் நீடித்த தாக்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புலிகளைப் போன்ற அரசு சாராத ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவை தொடர்பிலும், உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இதுவே, பொதுவான நீதி வழங்கப்படுகிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, இலங்கை அரசாங்கம் ஆழமான அரசியலமைப்பு, சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவை உள்ளதாகவும் வோல்கர் டர்க் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால துயரங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இது மிகவும் முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுயாதீன அங்கத்தவர்களை கொண்ட, சுயாதீன பொது வழக்கு தொடுநர் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சியை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வரவேற்றுள்ளார்.
முன்னைய தசாப்தங்களில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டத்தின் மீறல்களை ஆராய ஒரு சுயாதீனமான விசேட ஆணைக்குழு மற்றும் பிரத்தியேக நீதித்துறை பொறிமுறையை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கும், அவர் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் குடியரிமை தொடர்பான நாடாளுமன்ற சீர்திருத்தத்தை தாம் தீவிரமாக ஊக்குவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாடு இருந்தபோதிலும், இந்த சட்டத்தின் கீழ் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களுக்கு உடனடி தடை விதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும், பொறுப்புக்கூறல் தொடர்பிலும், காணி விவகாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பிலும் பணியாற்றுபவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்.
இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கின் இராணுவமயமாக்கல், காணிகளை திருப்பியளித்தல் மற்றும் அனைத்து மட்ட ஆட்சிக்கும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விரிவான பாதுகாப்புத் துறை சீர்திருத்தத்திற்கான அவசரத் தேவை உள்ளதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment