Header Ads



கொழும்பில் பேராசிரியர் காதர் மொகிதீனுக்கும், இசைமுரசு மர்ஹூம் ஹனிபாவுக்கும் மகுட விழா


"அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம்" என்ற தொனிப்பொருளில், தமிழக அரசின் "தகைசால் தமிழர்" விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே எம் காதர் மொகி தீனுக்கான பாராட்டு நிகழ்வு , இசை முரசு மர்ஹூம் நாகூர் ஈ. எம் .ஹனிபாவின் பிறந்த நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வு என்பன  19 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை மாலை 4.00  மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெறவுள்ளன .


பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுத்தீன் , ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா ஆகியவற்றின் தலைவர் என்.எம். அமீன் ஆகியோர் முன்னிலை வகிக்கவுள்ள இந் நிகழ்வுகளுக்கு  இலங்கைப் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் மற்றும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் ஆகியோர்  முதன்மை அதிதிகளாக  அழைக்கப்பட்டுள்ளனர்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன்  மற்றும் இசைமுரசு மர்ஹூம் நாகூர் ஈ.எம்.ஹனிபா ஆகியோரின்  சிறப்புகள் பற்றிய கருத்துரைகள் இடம் பெறவுள்ளதோடு,அவர்கள் தொடர்பான காணொளிகளும்  காட்சிப்படுத்தப்படவுள்ளன.


 தீனிசைப் பாடல் அரங்கில் ,மர்ஹூம் ஈ.எம்.ஹனிபாவின்  பாடல்களில் சிலவற்றை  தமிழ் நாட்டுப் பாடகர்களான இறையன்பன் குத்தூஸ், தமிழ் மாமணி தேரிழந்தூர் தாஜுதீன், இலங்கைப் பாடகர்களான  மருதமுனை கமால், இசைச்சுடர் கலைக்கமல் ஆகியோர் இசைக்க வுள்ளனர்.


இந்த நிகழ்வுகளில் கௌரவ அதிதிகளாக,இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான கே. நவாஸ் கனி, தமிழ் முற்போக்கு முன்னணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்,  இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதுவர் கலாநிதி கணேசநாதன் கேதீஸ்வரன் ,தமிழக சட்டமன்ற நாகபட்டினம் உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்,  இலங்கை தமிழரசு கட்சி பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம் .ஏ சுமந்திரன் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு முதன்மை துணைத் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமானகே.ஏ.எம். முஹம்மது  அபூபக்கர், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் ஜி. எம் .அக்பர் அலி, பெருநகர சென்னை மாநகராட்சி கவுன்ஸிலர் (எழும்பூர் )பாத்திமா முஸப்பர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.


அத்துடன்,இந் நிகழ்வுகளில்  தமிழகம் , ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் ,மலேசியா ஆகியவற்றிலிருந்தும் , இலங்கையிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும், கல்விமான்களும், தொழிலதிபர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து  கொள்ளவுள்ளனர் .தமிழகம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் அதிதிகளை ஒருங்கிணைப்பதில்  மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம்.கே.ஷாகுல் ஹமீது ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் விழா ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.