Header Ads



யாழ் மாநகரசபை முஸ்லிம் உறுப்பினர்களின் கூட்டறிக்கை


யாழ் மாநகரசபை. 13ஆம் வட்டாரத்தின் வடிகால் தூய்மைப்படுத்தல் தொடர்பில் பொது மக்களிடமிருந்தும், பொது அமைப்புக்களிடமிருந்தும் முழுமையான ஒத்துழைப்புக்களை எதிர்பார்த்தவர்களாக நாம் கூட்டாக பின்வரும் மாதிரித் திட்டத்தை முன்மொழிகின்றோம்.


எமது வட்டாரத்தின் சுத்தத்தை நாமே உறுதிப்படுத்துவோம் என்ற திட்டத்தின் கீழ் “முன்மாதிரி வட்டாரம் - பசுமையான மாநகரம்” எனும் தொனிப்பொருளில் எமது 13ஆம் வட்டாரம் ஜே 86 மற்றும் ஜே 87 கிராம சேவையாளர் பிரிவிற்குள் வசிக்கும் மாநகர வரியிறுப்பாளர்களான குடியிருப்பாளர்கள் இனிவரும் காலங்களில் தமது வீடுகளுக்கு முன்னால் உள்ள வடிகால்களையும் (வாய்க்கால்) வடிகால்களுடன் இணைந்து காணப்படும் புற்கள் மற்றும் மேலதிக கல், கழிவு மண்களை தாங்களே துப்பரவு செய்து வீடுகளுக்கு முன்னால் ஓரிடத்தில் சேர்த்தல். மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக வீடுகளுக்கு முன்னால் போடப்பட்டிருக்கும் தமது சொந்த தனிப்பட்ட பொருட்கள் (பழைய இரும்புகள், கல், மண் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை) போக்குவரத்திற்கு இடையூறு இன்றி வீட்டின் வளவிற்குள் எடுத்து வீதிகளில் இருந்து அப்புறப்படுத்துதல்.


மேற்குறிப்பிட்டவாறு குடியிருப்பாளர்கள் தமது வீடுகளுக்கு முன்னால் உள்ள வடிகால்களை தாங்களே துப்பரவு செய்து கழிவுகளை சேர்த்து வழங்கினால் அக் கழிவுகளை புதிய பொறிமுறை ஒன்றிற்கு ஊடாக வடிகால்களை துப்பரவு செய்த அடுத்த நாளே மாநகரசபை ஊழியர்கள், வாகனங்கள் மற்றும் எமக்கு ஒத்துழைக்க முன்வருபவர்கள் ஊடான பிரத்தியேக ஏற்பாடுகள் மூலமாக கழிவு வாகனங்களில் அப்புறப்படுத்துவதற்கு மாநகரசபை உறுப்பினர்களாக நாம் முழுமையான பங்களிப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என்பதை பகிரங்க அறிக்கை மூலம் தெரியப்படுத்துகின்றோம்.


எமது சோனகதெரு கிராமத்தை யாழ் மாநகரில் ஒரு முன்மாதிரி மிக்க கிராமமாகவும், முன்மாதிரி மிக்க மக்களைக் கொண்ட கிராமமாகவும் மாற்றும் முதல் முயற்சியை நாம் தொடங்கியிருக்கின்றோம். அந்த வகையில் மேற்படி விசேட திட்டத்திற்கு பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

 

எனவே எதிர்வரும் மழை காலம் ஆரம்பிக்க முன்னர் மேற்படி முன்மாதிரிமிக்க திட்டத்திற்கு ஜே 86 மற்றும் ஜே 87 கிராம பிரிவில் வசிக்கும் பொதுமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சமூக மட்ட பொது அமைப்புக்கள், முழுமையான ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

வஸ்ஸலாம்


வெளியீடு

முஸ்லிம் மாநகரசபை உறுப்பினர்கள்.

யாழ்ப்பாணம் மாநகர சபை

No comments

Powered by Blogger.