யாழ்ப்பாணத்தில் பசுமை மாநகரம் வேலைத்திட்டங்கள் ஆரம்பம்
முஸ்லிம் மாநகரசபை உறுப்பினர்களின் இம் முன்மாதிரி மிக்க திட்டத்திற்கு பொது மக்களிடமிருந்தும், பொது அமைப்புக்களிடமிருந்தும் அமோக வரவேற்பும் அனுசரணைகளும் கிடைத்துள்ளதுடன், உடனடியாக வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவும் முன்வந்தனர்.
பொது அமைப்புக்களின் ஒத்துழைப்பிற்கு அமைவாக முதலாவது வேலைத்திட்டமாக வட்டாரத்தில் உள்ள சகல வீதிகளினதும் இரு பக்கங்களிலும் வடிகால்கள் மற்றும் வீதி ஓரங்களில் உள்ள நீண்டகால மணல் குமியல்கள், தேவையற்ற கற்கள், மரங்கள், புற்கள் கட்டுமானப் பொருட்களின் எஞ்சிய பொருட்கள் என்பவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தீர்மானத்திற்கு அமைவாக 13 வட்டாரத்தின் ஜே 86 கிராம சேவையாளர் பிரிவிற்கு உட்பட்ட வீதிகளான காதி அபூபக்கர் வீதி, மொஹிதீன் பள்ளிவாசல் வீதி, கலீபா அப்துல்காதர் வீதி ஆகியவைகள் 2025.09.06 முதல்நாள் வேலைத்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டிருந்தது.
இம் மூன்று வீதிகளின் ஓரங்களிலும் உள்ள மேற்படி சகலவிதமான நீண்டகால கழிவுகளும் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு சிரமதான நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதுடன், வீடுகளின் கழிவுகளும், துப்பரவு செய்யப்பட்டு வீதிகளில் குமிக்கப்பட்டிருந்த வடிகால்களின் கழிவுகளும் சேர்த்து அனுசரணையாளர்களால் வாடகைக்கு பெறப்பட்ட தனியார் உழவு இயந்திரங்கள் ஊடாக அப்புறப்படுத்தப்பட்டன.
இவ் வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக 2025.09.07 ஆம் திகதியும் இரண்டாம் கட்டமான வேலைத்திட்டங்கள் ஜே 87 கிராம சேவையாளர் பிரிவிற்குள் உள்ளடங்களும் வீதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் வேலைத்திட்டத்திற்கு உதவி மற்றும் ஒத்துழைப்புக்களை யாழ்ப்பாணம் ஐக்கிய விளையாட்டுக்கழகம், யாழ்ப்பாணம் ஜனாஸா நலன்புரி சங்கங்கள் வழங்கியிருந்ததுடன், தொழிலதிபர் எஸ்.எச்.நியாஸ் (JDM) அவர்கள் முழுமையான பங்களிப்புக்களையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
முன்மாதிரி வட்டாரம் - பசுமை மாநகரம் முதல் நாள் தொடக்க நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர்களான என்.எம்.அப்துல்லா, பி.எஸ்.எம்.சரபுலனாம், எம்.றொயிஸ், தொழிலதிபர் எஸ்.எச்.நியாஸ், யாழ்ப்பாணம் ஐக்கிய விளையாட்டுக்கழகம், யாழ்ப்பாணம் ஜனாஸா நலன்புரி சங்கங்களின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.
மாநகரசபை உறுப்பினரின் ஊடகப்பிரிவு
கௌரவ என்.எம்.அப்துல்லாஹ்
2025.09.06

Post a Comment