மேலும் 500 வீடுகளை கட்டித்தர சவூதி தயார் - அக்கரைப்பற்று வீடுகளை விடுவிக்குமாறு உருக்கமான வேண்டுகோள்
தொடர்ந்து உரையாற்றுகையில்,
சென்ற 26.12.2004 ஆம் திகதி இலங்கையின் கரையோரத்தைத் தாக்கிய இயற்கை அனர்த்த சுனாமி பேரலையால் வீடு, வாசலை இழந்தவர்கள் அனைவருக்கும் அந்தந்தப் பிரதேசங்களில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டும், அதனை கௌரவமாக கையளிக்கப்பட்டும் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இருந்தபோதிலும் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் சுனாமியால் பாதிப்புற்ற மக்களுக்காக சவூதி அரசு எமது அரசுடன் ஒப்பந்தம் செய்து சுனாமிப் பாதிப்புக்காகவே என்று மானியமாக நிதி வழங்கி சுமார் 1000 கோடி ரூபாய்கள் செலவில் வீட்டுத்திட்டம் ஒன்றினை நிர்மாணித்தது. இதன் கட்டுமானப் பணிகள் அக்கரைப்பற்றுப் பிரதேசத்திற்கு உட்பட்ட நுரைச்சோலைப் பிரதேசத்திலுள்ள அரச காணியில் 2009 இல் நிர்மாணிக்கப்பட்டு முடிவுக்கு வந்தது. இந்த வீட்டுத்திட்டத் தொகுதியில் 500 வீடுகளும், பாடசாலையும், வைத்தியசாலையும், சந்தைத் தொகுதியும், பள்ளிவாசலும், விளையாட்டு மைதானமும் இன்னும் பல உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒட்டுமொத்த அழகிய கிராமமே நிர்மாணிக்கப்பட்டது. இந்த வீடுகள் அனைத்தும் தற்போது இனவாதத்தாலும், சுயநலவாதத்தாலும் அழிந்துபோன மனிதநேயத்தின் சாட்சியமாகிய 20 ஆண்டுகளாக காடாகக் காணப்படுகிறது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் சவூதி அரேபிய கௌரவ காலிட் ஹமூத் அல் கத்தானி அவர்களுக்கும் இடையில் கடந்த ஒக்டோபர் 2024ல் நடைபெற்ற சந்திப்பில் தூதுவர் ஜனாதிபதியிடம் நுரைச்சோலை வீடுகளை சுனாமியால் பதிப்புற்ற அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டதுடன், உங்களுக்கு மேலும் 500 வீடுகளைக் கட்டித் தரவும் நாங்கள் தயாராக உள்ளோம் என தூதுவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். இதன் பின் கௌரவ பிரதம மந்திரி ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹெரத் ஆகியோர்களிடமும் இவ் நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு சவூதி அரேபிய தூதுவர் கேட்டுக் கொண்டார். இவ்வீடுகளை அரசாங்கம் விரைவில் வழங்கும் என வாக்குறுதியளிக்கப்பட்டு 11 மாதங்கள் ஆகியும் இன்னும் இவ்வீடுகள் வழங்கப்படவில்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் பிரசாரக் கூட்டம் அக்கரைப்பற்றில் நடைபெற்ற போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக அவர்கள் சவூதி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களுக்கு விரைவில் கையளிக்கவுள்ளதாக பகிரங்கமாக வாக்குறுதியளித்தார். அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல்களில் NPP கட்சிக்கு பெருந்தொகையான மக்கள் ஆதரவளித்தனர்.
நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 130,000 வாக்குகளை NPP கட்சி பெற்று 4 பாராளுமன்ற உறுப்பினர்களையும், ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரையும் பெற்றுள்ளது.
சுனாமியாலும், இனவாதத்தாலும் பாதிப்புற்று 20 வருடங்களாக பாதிப்புற்ற மக்கள் இருப்பதற்கு இடமில்லாமல் அங்குமிங்குமாக குடிசைகளிலும், வாடகை வீடுகளிலும் குழந்தைகளுடன் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள். நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் இவ் நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நான் முன்மொழிவை சமர்ப்பித்த போது கௌரவ அமைச்சர் திரு. அநுர கருநாரத்ன அவர்கள் நுரைச்சோலை 500 வீட்டுத்திட்டம் இதுவரையும் வீடமைப்பு அமைச்சிடம் பாரமளிக்கப்படவில்லை எனவும், இவ் வீட்டுத்திட்டம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் மேற்பார்வையின் கீழ் உள்ளதாகவும் தெரிவித்தார்.
நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் வாய்மூல கேள்விக்கு பதிலளித்த கௌரவ பிரதம மந்திரி அவர்கள் நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பில் தேசிய இன விகிதாசாரத்தில் வீடுகளை பங்கிடுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அம்பாறை மாவட்ட இன விகிதாசார அடிப்படையில் இந்த 500 வீடுகளை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் இது தொடர்பாக பாராளுமன்றக் குழுவொன்றை நியமித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கௌரவ பிரதமந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தின் நீதிமன்றத் தீர்ப்பினை நுரைச்சோலை வீட்டுத்திட்டத்திற்கு மாத்திரம் அமுல்படுத்தாமல் நாடு முழுவதும் அமுல்படுத்த வேண்டும். நமது நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கு காணி கிடைக்க வேண்டுமாக இருந்தால் நுரைச்சோலை நீதிமன்றத் தீர்ப்பை நாடு பூராகவும் அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அசராங்கம் மேற்கொள்ள வேண்டும்.
அக்கரைப்பற்று பிரதேச மக்கள் ஒவ்வொரு வருடமும் தங்களுக்கான வீடுகளை வழங்குமாறு தங்களது பிரதேச செயலகத்தின் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டங்கள் செய்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Post a Comment