ஆம், சுவனமே உயரிய இலக்கு
அமெரிக்காவின் செல்வாக்கு மிக்க தொழிலதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி. கணைய புற்று நோயால் 56 ஆவது வயதிலேயே இறந்தார். அப்போது அவர் விட்டுச்சென்ற சொத்து ஏழு பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் சுமார் 61,130 கோடி ரூபாய்.
இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் மரண தருவாயில் அவர் கூறிய வார்த்தைகள்தான் ஆச்சரியம் மிக்கவை.
ஆம், அவர் கூறினார்:
"வாழ்க்கை என்றால் பணம் சம்பாதிப்பது என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால் இப்போதோ என்னிடம் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை.
செல்வம் வெறும் எண்ணிக்கையாக மாறிவிட்டது. இதோ இப்போது நோயால் அவதியுற்று படுக்கையில் இருந்தவாறு என் வாழ்க்கை குறித்து சிந்திக்கிறேன். உடனடியாக மரணத்தை எதிர்கொள்ளும்போது எனது நற்பெயரும் செல்வமும் அர்த்தமற்றதாக மாறிவிட்டன.
உங்கள் வாகனத்தை ஓட்டவும், அன்றாடப் பணிகளை செய்யவும், தொழிலை நிர்வகிக்கவும் பணியாளர்களை நீங்கள் நியமிக்கலாம். ஆனால் உங்கள் வலியையோ உங்கள் நோயையோ சுமக்க எந்த விலை கொடுத்தும் யாரையும் உங்களால் நியமிக்க இயலாது.
எதை இழந்தாலும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் வாழ்க்கையை இழந்தால் பெற்றுக்கொள்ள முடியாது.
30 டாலர் கடிகாரம்.. 3000 டாலர் கடிகாரம்.. இரண்டும் ஒரே நேரத்தையும் ஒரே நிமிடத்தையுமே காட்டுகின்றன என்பதை இப்போது உணர்கிறேன்.
வசிக்கும் வீடு 300 சதுர அடியாகவோ 3000 சதுர அடியாகவோ இருந்தாலும், ஒருசில மீட்டருக்கு மேல் காலை விரித்து உங்களால் தூங்க முடியாது.
விமானத்தில் முதல் வகுப்பிலோ பொருளாதார வகுப்பிலோ எப்படிப் பயணித்தாலும், விமானம் விபத்துக்கு உள்ளானால் உங்களுடன் சேர்ந்து எல்லாம் ஒரு நொடியில் சாம்பல்தான்.
எனவே வாழ்க்கையில் ஓர் உயரிய இலக்கை நீங்கள் வைத்திருந்தால், மற்றவர்களை மகிழ்ச்சியடையச் செய்திருந்தால் அதுதான் உண்மையான நிம்மதி என்பதை புரிந்துகொள்வீர்கள்''.
மரணப்படுக்கையில் இருந்தபோது ஸ்டீவ் ஜாப்ஸ் கூறிய அந்தக் கடைசி பத்தியையே பல நூறு வருடங்களாக ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் இஸ்லாம் கூறுகிறது.
ஆனால் ஏனோ பலர் சிந்திக்க மறுக்கின்றனர்.
சுவனம் எனும் உயரிய இலக்கைக் குறித்து அல்லாஹ் சொல்கிறான்:
"போட்டியிட்டு முந்திக்கொள்ள முயல்பவர்கள், இதனை அடைந்துகொள்வதில் முந்திக்கொள்ள முயலட்டும்!'' (83:26)
ஆம். சுவனமே உயரிய இலக்கு!
நூஹ் மஹ்ழரி ✍️

Post a Comment