Header Ads



ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட 31 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை


இலங்கையர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வலுவற்றதாக்கி தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் தாக்கல் செய்த இரண்டு மனுக்களை ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது. 


இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சரவை உள்ளிட்ட 31 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். 


இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இலங்கை பிரஜைகளின் தனிப்பட்ட தரவுகள் இந்தியாவிற்கு கிடைக்கும் என்றும், இது இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 


உள்நாட்டில் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் திட்டம் இந்நாட்டு ஆட்பதிவு திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் ஒதுக்கீட்டு செயல்முறைக்கு மாறாக, இந்திய நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முடிவு தன்னிச்சையானது மற்றும் சட்டத்திற்கு முரணானது என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


இதன் ஊடாக இலங்கையின் இறையாண்மை, தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தில் வௌிநாட்டு அரசாங்கம் தலையிட வாய்ப்பளிக்கும் என்றும், இது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதற்கு வழிவகுக்கும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.