Header Ads



பேஸ்புக் ஊடாக, தனக்கு அவமானம் - 50 மில்லியன் நஷ்டஈடு கேட்கும் இம்ரான் Mp


பேஸ்புக் ஊடாக, தனக்கு அவமானம் ஏற்படுத்தும் கருத்துக்களை பதிவிட்டமைக்கு எதிராக ஐம்பது மில்லியன் நஷ்டஈடு செலுத்த வேண்டும் என கோரி, தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சம்பந்தப்பட்டவருக்கு நேற்றையதினம்(18) அனுப்பி வைத்துள்ளார்.


அந்த கோரிக்கை கடிதத்தில்,மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,


குறிஞ்சாக்கேணி, கிண்ணியா எனும் விலாசத்தினை வசிப்பிடமாக கொண்ட, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அறிவுறுத்தலுக்கமைவாக இக்கோரிக்கைக்கடிதம் அனுப்பி வைக்கப்படுகின்றது.


எனது கட்சிக்காரர் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராவார்.


தாங்கள் முகப்புத்தகத்தில் 2025.06.25 அன்றோ அல்லது அதற்கண்மித்த திகதியொன்றிலோ எனது கட்சிக்காரர் தொடர்பில், மக்களை பிழையாக வழி நடாத்தியும், மக்களுக்கு தவறான புரிதலை உருவாக்கும் விதத்திலும், திட்டமிட்டு முகப்புத்தகத்தில் பதிவொன்றினை செய்துள்ளீர்.


இதன்மூலம் எனது கட்சிக்காரரின் அரசியல் எதிர்காலத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தி, அவருக்கு இருக்கும் நன்மதிப்பில் கலங்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளீர்.


இதன் விளைவாக சமூகத்தின் மத்தியில், எனது கட்சிக்காரருக்கு ஈடு செய்ய முடியாத அவதூற்றினையும் இழுக்கினையும் தங்களுடைய பதிவு ஏற்படுத்தி உள்ளது என்பதை உங்களின் கவனத்திற்கு அறியத் தருகின்றேன்.


எனவே, இதன் மூலம், எனது கட்சிக்காரருக்கு பாரிய மன உழைச்சல் ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, அவரது கௌரவத்திற்கும் நற்பெயருக்கும் கலங்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது என்பதால், எனது கட்சிக்காரருக்கு ரூபா ஐம்பது மில்லியன் (ரூபா. 50,000,000.00) செலுத்த வேண்டும் என்றும், குறித்த இழப்பீட்டு தொகையினை இன்றய தினத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் கோரப்படுகின்றீர்கள்.


தவறும் பட்சத்தில் தங்களுக்கெதிராக எந்தவிதமான முன்னறிவித்தலின்றி திருகோணமலை நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்து குறித்த பணத்தொகையினையும் வழக்கு செலவினையும் தங்களிடமிருந்து கோர வேண்டிவருமென மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

No comments

Powered by Blogger.