Header Ads



விபத்தில் வபாத்


பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியின் தலவில பகுதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


கற்பிட்டி, கண்டல்குடா 90 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த ஜஸார் முஹம்மது ஜஸ்ரின் என்ற 20 வயதுடைய இளைஞரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் உள்ள தூண் ஒன்றில் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த இளைஞனை அங்கிருந்தவர்கள் உடனடியாக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து, உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக  கற்பிட்டி வைத்தியசாலையில் இருந்து, புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.


மேலும், புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம், இளைஞனின் மரணம் தொடர்பான மரண விசாரணையை முன்னெடுத்ததுடன், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது எனத் தீர்ப்பு வழங்கி பிரேத பரிசோதனையின் பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.


இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


-புத்தளம் நிருபர் ரஸ்மின்-

No comments

Powered by Blogger.