Header Ads



ஈரான் செய்த உதவிகளை மறந்து, இந்த அரசாங்கம் இஸ்ரேல் விடயத்தில் இரட்டை வேடம்


அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்து, இஸ்ரேலின் அடாவடித்தனத்தை ஆதரிக்கும் போக்கில் செயற்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தில் (19) இதுபற்றி மேலும் குறிப்பிட்ட அவர்,


“தற்காப்புத் தேவைக்காகவே இஸ்ரேலை ஈரான் தாக்கி வருகிறது. ஷியோனிஸ இஸ்ரேலே ஈரானை முதலில் தாக்கியது. இதற்கான பதிலடியையே ஈரான் தொடுத்துக்கொண்டிருக்கின்றது. இதில், ஈரான் நடந்துகொள்வது தற்காப்பு வியூகமே. மத்திய கிழக்கில் பொலிஸ்காரனாக நடந்துகொள்ள இஸ்ரேல் முனைவதாலேயே அங்கு அமைதியின்மை ஏற்படுகிறது.


இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது, 250 மில்லியன் டொலரை ஈரான்தான் எமக்கு வழங்கியது. இந்தக் கடனை இன்னும் செலுத்திக் கொண்டிருக்கின்றோம். இந்த நியாயங்களை மறந்து, இந்த அரசாங்கம் இஸ்ரேல் விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டில் செயற்படுகிறது. அட்டகாசங்களை எதிர்க்கும் தைரியமில்லாத, கோழைத்தன அரசாக இந்த அரசாங்கம் நடந்துகொள்கிறது.


முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானமெடுத்ததால், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார். ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களாக இந்த அரசாங்கத்தின் நடத்தைகள் திருப்தியானதாக இல்லை.


நிந்தவூர் பிரதேச சபையில் முறைகேடுகள் நடந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா கூறினார். அவ்வாறானால், அவ்வூர் மக்கள் எங்களது வேட்பாளரை எம்.பியாக வெற்றியீட்டச் செய்துள்ளார்களே. மக்கள் ஆணை எமக்கேயுள்ளது.


இதுபோன்றுதான், கற்பிட்டி பிரதேச சபையில், எமது பிரதிநிதி ஆஷிக் சபையின் தலைவராகத் தெரிவாக இருந்தார். அதற்கிடையில், பாதுகாப்பு வீரர்கள் அவரைக் கடத்திச் சென்று வாக்களிக்க முடியாமலாக்கினர். இதனால், 01 வாக்கினால் கற்பிட்டி சபையை இழந்தோம். இதற்கு நியாயம் கோரி நீதிமன்றம் செல்லவுள்ளோம்” என்று கூறினார்.

No comments

Powered by Blogger.