நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்
பல்வேறு நாடுகளுக்கான இலங்கையின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுச் செல்லும் புதிய தூதுக்குழுத் தலைவர்களுடன் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதில் முன்னணியில் இருந்து சிறப்புக் கவனத்துடன் பணியாற்றுமாறும், எந்தவித பாகுபாடும் இல்லாமல் நியாயமாக செயல்படுமாறும் புதிய இராஜதந்திரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இலங்கைத் தூதரகத்தை, இலங்கையர்கள் தமது இடமாக உணரும் வகையில் செயற்படுமாறு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டிற்கான தமது சேவையை செயற்திறன்மிக்க வகையில் மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கும், இலங்கையில் உள்ள தொழில்முனைவோர் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைக் கண்டறிய உதவுவதற்கும் தேவையான ஒருங்கிணைப்பு இராஜதந்திர சேவையின் ஒரு பகுதியாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அதன்படி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது தூதுவரின் முக்கிய பொறுப்பாகும் என்றும், அதற்குத் தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் நடந்த சில சம்பவங்களால் தூதுவர்கள் கடந்த காலங்களில் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், தற்போதைய அரசாங்கம் தூதுவர்களின் கௌரவத்தை பாதிக்கும்
எவற்றையும் செய்யாது என்றும் எந்த நேரத்திலும் தூதுவர்களுக்கு அரசாங்கம் துணை நிற்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Post a Comment