ஞானசாரருக்கு பிழையான தகவல்களை வழங்குகிறார்கள் - பிரதியமைச்சர் முனீர் முழப்பர்
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
தேரர் ஒருவர் எனக்கு எதிராக தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படையும் இல்லை. அன்று இந்த நாட்டில் தீ மூட்டும்போது, நாங்கள்தான் நாடு பூராகவும் சென்று நாட்டில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த பாடுபட்டோம் என்பதை எங்கள் மீது குற்றச்சாட்டு தெரிவிப்பவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம் என பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் இடம்பெற்றுவரும் துப்பாக்கி பிரயோகங்கள் மற்றும் கொலைகளை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், பாதாள உலகத்தினருக்கும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் இடையில் எமது நாட்டின் அரசியல்வாதிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருந்துவருவதாக தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து தெரிவித்து வந்திருக்கிறது. அதனை யாராலும் மறுக்க முடியாது.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்துவருவதாக அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துவந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், கொழும்பு பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டி56 துப்பாக்கி தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
அதனால் இந்த நாட்டை சீரழித்துவரும் போதைப்பொருள், வன்முறைகளுடன் தொடர்புபட்ட அரசியல் கலாசாரமே கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. அந்த அரசியலையே அவர்கள் செய்துவந்தார்கள். அதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போதும் அவர்கள் தெரிவித்துவந்த விடயம்தான், தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்ற பிரசாரமாகும். ஆனால் கடந்த 7 மாதங்களில் 3 தேர்தல்களை நடத்தி, அதில் பாரிய வெற்றிபெற்று, நாட்டின் சுதந்திரத்துக்கு பின்னர் எந்த தேர்தல் வன்முறையும் இடம்பெறாமல் தேர்தல் வெற்றியை கொண்டாடுகின்ற புதிய கலாசாரத்தை தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டில் உருவாக்கி இருக்கிறது.
எனவே இதனை தாங்கிக்கொள்ள முடியாத, மக்களின் சொத்துக்களை திருடி, கொள்ளையடித்து செய்துவந்த அரசியல் கலாசாரம் இல்லாமலாகிவிடுமோ என்ற அச்சத்தில், இந்த அரசாங்கம் தொடர்பில் பல்வேறு கட்டுக்கதைகளை சொல்லி வருகிறார்கள். பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றவர்களை பார்க்கும்போது, அவர்கள் எந்த தரப்பினருடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில், இந்த நாட்டில் வன்முறையற்ற சிறந்த அரசியல் கலாசாரம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் செயற்படுகின்ற அரசியல் கட்சியே தேசிய மக்கள் சக்தியாகும்.
அதேநேரம் தேரர் ஒருவர் என்னைப்பற்றி பொய் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்திருக்கிறார். திஹாரி பிரதேசத்தில் இருக்கும் ஒரு கல்வி நிறுவனத்தின் பொறுப்புதாரி என தெரிவித்திருக்கிறார். நான் திஹாரி பிரதேசத்துக்கு குடிவந்து தற்போது 10 வருடங்கள் ஆகின்றன. அதற்கு முன்பிருந்தே குறித்த கல்வி நிறுவனம் இருந்து வருகிறது. குறைந்தபட்சம் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் இருப்பவர்களைக்கூட எனக்கு தெரியாது. அந்த தேரருக்கு தகவல் வழங்குபவர்கள் பிழையான தகவல்களை வழங்கி இருக்கிறார்கள்.
அதேபோன்று நாங்கள் அடிப்படைவாதிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டையும் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த நாட்டில் இருக்கும் பெளத்த, இந்து, கிறிஸ்தவ மதத் தலைவர்களுடன் எங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதை அந்த மதத்தலைவர்களுக்கு தெரியும். நாங்கள் ஒருபோதும் அடிப்படைவாதிகளுக்காக கதைத்தவர்கள் அல்ல. மாறாக இந்த நாட்டின் அமைதிக்காக கதைத்தவர்கள். எங்கள் மீது குற்றச்சாட்டு தெரிவிப்பவர்கள் அன்று இந்த நாட்டில் தீ மூட்டும்போது, நாங்கள்தான் நாடு பூராகவும் சென்று நாட்டில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த பாடுபட்டோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.
Post a Comment