Header Ads



உள்ளூராட்சி தேர்தலில் அரச அதிகாரத்தையும், அரச சொத்துக்களையும் தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள்


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரச அதிகாரத்தையும் அரச சொத்துக்களையும் தவறாகப் பயன்படுத்திய 30 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 


இதில் 14 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தேர்தல் சட்டங்களை மீறிய 322 சம்பவங்கள் தொடர்பில் பெப்ரல் அமைப்புக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 


இதில் 18 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 17 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 


வாக்காளர்களுக்கு உதவி வழங்குதல் மற்றும் இலஞ்சம் கொடுத்தல் தொடர்பான 38 சம்பவங்கள் பதிவாகியிருந்தாலும், 70,000 வேட்பாளர்கள் போட்டியிடும் சூழ்நிலையில் இந்த விடயமானது பாரதூரமான சூழ்நிலை அல்ல என்றும் ரோஹண ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டினார். 


பல வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டதாகவும், ஒரு வேட்பாளர் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஆனால் அது தேர்தலுடன் நேரடியாக தொடர்புடையதா என்பது குறித்து இன்னும் தகவல்கள் வௌியாகவில்லை என்றும் தெரிவித்தார். 


தொடர்ந்து கருத்து வௌியிட்ட ரோஹண ஹெட்டியாராச்சி, அரச அதிகாரத்துடனான சில அறிக்கைகளை வெளியிடுவது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், அது வாக்காளர்கள் மீது மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.