இவர் யார் தெரியுமா...?
இலண்டன் ராயல் மருத்துவமனையில் இருதய சத்திரசிகிச்சை விஷேட நிபுணராக பணியாற்றும் டாக்டர் ஸியா கமாலுதீன் எகிப்து தலைநகர் கைரோவில் ஒரு பாராட்டு விழாவிற்கு அழைக்கப் பட்டிருந்தார்.
பதினைந்து வருட கால நீண்ட இடைவெளியிற்கு பின்னரே அவர் தாயகம் திரும்பியிருந்தார்.
விழா மண்டப வாயலில் ஒரு வயோதிபர் பத்திரிகைகளை விரித்து விற்றுக் கொண்டிருப்பதனைக் கண்டார்.
பத்திரிகை விற்கும் முதியவர் தனக்கு மிகவும் பரீட்சயமான முகத்தை உடையவராக இருப்பதாக உணர்ந்தார், உள்ளே போய் அமர்ந்த பின்னும் அவரது மனதில் கடந்த கால நினைவலைகள் ஓடிக் கொண்டிருந்தன.
அவர் விருதினைப் பெற அழைக்கப்பட்ட போது மேடைக்கு செல்ல முன் மண்டப வாயிலுக்குச் சென்று பத்திரிகை விற்பவரின் கரங்களைப் பற்றி தன்னுடன் வருமாறு அழைக்கிறார்.
அந்த முதியவரோ தயங்குகிறார், வைத்தியரின் வற்புறுத்தலில் அவர் உடன் செல்கிறார், நேரடியாக விழா மேடைக்கு அழைத்துச் சென்று தனக்குரிய விருதை பத்திரிகை விற்கும் முதியவருக்கு தருமாறு கேட்டுக் கொள்கிறார்.
பின்னர், மண்டபத்தில் அமர்ந்திருந்தவர்களிடம் இவர் யார் தெரியுமா?, இவர்தான் எனது ஆரம்ப பள்ளி அரபு மொழி ஆசிரியர் உஸ்தாத் கலீல் அலி என்பதாக அறிமுகம் செய்து விட்டு, உஸ்தாத் அலி அவர்களே, என்னை ஞாபகம் இருக்கிறதா?, நான் உங்கள் மாணவன் ஸியா கமாலுதீன், எனது திறமைகளை ஊக்குவித்து உனக்கு சிறந்த எதிர்காலம் உண்டு என அவ்வப்போது கூறுவீர்கள்.. என்று சொல்ல ஆசானும் அவரை அறிமுகமாகிக் கொள்கிறார்.
அரங்கம் நிறைந்த கரகோஷத்துடன் தனது ஆசானை அரவணைத்து நெற்றியில் முத்தமிட்டு தனக்கு தரப்பட்ட விருதை ஆசானுக்கு வழங்கி மகிழ்கிறார்.
குறிப்பு: இதனை அரபு மொழியில் இருந்து மொழி பெயர்த்துள்ளேன், எப்பொழுதும் எமக்கு கல்வி ஞானம் புகட்டிய ஆசிரியர்கள், ஆசிரியைகளை, முஅல்லிம்கள், உஸ்தாத்மார்களை நாம் மறந்து விடக் கூடாது.
அவர்களை சென்று பார்ப்பது, அவர்களது சுகதுக்கம் விசாரிப்பது, அவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்குவது, அவர்களது தேவைகள் அறிந்து உதவி உபகாரம் செய்வது அவர்களது ஆசிகளை பிரார்தனைகளை பெற்றுக் கொள்வது எல்லாம் உயரிய பண்பாடுகள் சார் விடயங்களாகும்.
எனது அருமைத் தந்தை மஸீஹுத்தீன் ஒரு அதிபராகவும், அன்பின் தாய் ஆமினா ஒரு ஆசிரியராகவும் (ரஹ்மதுல்லாஹி அலைஹிமா) இருந்ததாலும், நாம் பாடசாலை வளாக விடுதியில் வளர்ந்ததாலும், குடும்பத்தில் பலர் ஆசிரியர் ஆசிரியைகளாக, நான் உட்பட விரிவுரையாளர்களாக இருந்ததாலும் ஆசிரியத்தின் அருமை பெருமைகளை ஆழ்மனதில் கொண்டுள்ளோம்.
ரப்பிர்ஹம்ஹுமா கமா ரப்பயானா ஸிகாரன்!
மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
18.04.2025 || SHARE
www.jaffnamuslim.com

Post a Comment