ஆசிரியர் வழங்கிய ஒரு ரியால் - உலகச் செல்வந்தரின் அனுபவ குறிப்பு
ஸவூதி அரேபிய கோடீஸ்வரர் ஸுலைமான் அப்துல் அஸீஸ் அல்-ராஜிஹி உலகின் 120 ஆவது பணக்காரர் என்று போர்பஸ் நிறுவனம் பட்டியலிட்டிருந்தது.
2011 ஆம் ஆண்டு தனது 770 கோடி அமெரிக்க டாலர் பெறுமதியான சொத்துகளில் மூன்றில் இரண்டு பகுதியை நற்பணிகளுக்கு செலவிடுவதாகவும், மூன்றில் ஒரு பகுதியை தனது பிள்ளைகளுக்கு வழங்குவதாகவும் அறிவித்திருந்தார்.
தற்போது 96 வயதாகும் அவர் ஸவூதி அல்ராஜிஹி நிதி நிறுவனங்களின் ஸ்தாபகர் ஆவார்.
வாழ்வில் ஆரம்பத்தில் பூச்சியமாக இருந்த தமது பொருளாதாரம் பின்னர் இரு முறைகள் பூச்சியத்தை எட்டியதாகவும் ஆனால் தற்போது தன் சுய விருப்பத்தின் பேரில் (பொருளாதாரத்தில்) பூச்சியத்திலிருந்து சென்று படைத்த ரப்பின் இராச்சியத்திற்கு அவனது திருப்தி ஒன்றையே நாடி மீள விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது சிறுபராயத்தில் குடும்பம் வறுமையால் வாடியதாகவும் அவர் கூலித் தொழில்கள் பலவற்றை செய்ததாகவும் சுயசரிதையில் கூறியுள்ளார்.
அல்கஸீம் பிராந்தியத்தில் ஒரு வறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவரும் அவரது சகோதரரும் ஒரு காலத்தில் ஹஜ் பயணிகளுக்கு மக்கா மதீனா சென்றுவர ஒட்டகைகளை வாடகைக்கு தரும் தொழிலையும் செய்திருக்கின்றனர்.
சிறு வயதில் பாடசாலை சுற்றுலா ஒன்றில் செல்ல அவருக்கு ஒரு ரியால் தேவைப்பட்டதாம், வீட்டில் இல்லாததால் மனமுடைந்து போயிருந்தாராம்.
மறுநாள் பாடசாலையில் கற்பித்த பலஸ்தீனைச் சேர்ந்த ஆசிரியர் கேட்ட சில கேள்விகளுக்கு சரியான பதில் தந்ததால் ஆசிரியர் அவரைப் பாராட்டி ஒரு ரியால் காசை அன்பளிப்புச் செய்துள்ளார்.
அந்த காசை செலுத்தி மிகவும் மகிழ்ச்சியாக பாடசாலை சுற்றுலா சென்று வந்ததாகவும், அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்களாக மனதில் இருந்ததாகவும் சொல்கிறார்.
பின்னர் தான் பெரும் செல்வந்தராக ஆகிய பின்னர் ஒரு நாள் தனக்கு உதவிய ஆசானை தேட ஆவல் கொண்டு ஒருவாறு கண்டுபிடித்துள்ளார்.
அவர் முதுமையடைந்து வறிய நிலையில் வருமானங்களும் இன்று வாழ்வதை அறிந்து ஒருநாள் அவரை காண்பதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளார்..
அவரிடம் சென்று ஸலாம் கூறிவிட்டு உங்களுக்கு ஒரு கடனைச் செலுத்த வந்துள்ளேன் என கூறியுள்ளார், அதற்கு அந்த முதியவர் எனக்கு எவருமே கடன் தர வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார்.
இவரும் கடந்த கால பாடசாலை வாழ்வை நினைவூட்டி தான் ஸூலைமான் அப்துல் அஸீஸ் எனும் மாணவன் என்பதையும் ஆசான் தனக்கு சன்மானம் தந்ததையும் நினைவுகூரி ஆசானையும் தனது வாகனத்தில் ஏற்றிச் கொண்டு சென்றுள்ளார்.
ஒரு அழகிய வில்லா வீடு ஒன்றின் முன் நிறுத்தி இந்த வில்லாவும் இந்த வாகனமும் தங்களுக்குரியது, இனி வாழும் வரை மாதாமாதம் உங்களுக்குரிய ஓய்வூதியம் உங்களை வந்து சேரும் இன்ஷா அல்லாஹ் என்று கூறினாராம்.
இது எனக்கு அதிகமானது, தான் செய்ததோ சிறிய உபகாரம் என பெரியவர் கூறவே, இல்லை அன்றைய நிலையில் நீங்கள் என் மனதில் ஏற்படுத்திய மகிழ்ச்சியிற்கு இது போன்று 10 வில்லாக்கள் தந்தாலும் ஈடாக மாட்டாது என்று பணிவாகக் கூறினாராம்.
அத்தோடு அந்த ஆசிரியரின் மகனுக்கு தனது நிறுவனத்தில் உயர்பதவி ஒன்றையும் வழங்கியுள்ளார்.
குறிப்பு:
வசதி வாய்ப்புகள் வந்த பின்னர் நற்குணங்களும், நன்றியுடைமையும், ஹம்தும் ஷுக்ரும், ஹலால் ஹராம் பேணலும், தயாளத் தன்மையும் பரோபகாரங்களும் வருவதாக நாம் நினைக்கலாம், ஆனால், அத்தகைய உயரிய ஆன்மீக பண்பாடுகளும், உளத்தூய்மையும் தான் மனிதர்களை உச்சத்துக்கு கொண்டு செல்கின்றன.
ஸவூதி அரச குடும்பம் தவிர்த்து உழைப்பால் உயர்ந்த மிகப் பெரும் செல்வந்தர்கள் அல்ராஜிஹி குடும்பமாகும், அது தயாளத் தன்மைக்கும் பரோபகாரத்திற்கும் பெயர் போன குடும்பமாக வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது.
மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
19.04.2025 || SHARE

Post a Comment