ஜனாதிபதி, அமைச்சர்கள் வாய்ச்சொல் வீரர்களாகவே செயற்படுகிறார்கள்
(இராஜதுரை ஹஷான்)
போலியாக கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம். ஆகவே செய்வதை முறையாக செய்யுங்கள் என்று அரசாங்கத்திடமும் அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடமும் குறிப்பிட்டுக்கொள்கிறோம். சட்டத்தின் பிரகாரம் கைதுகள் இடம்பெறவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இலங்கை கம்யூனிசக் கட்சி காரியாலயத்தில் பங்காளிக் கட்சி தலைவர்களுடன் சனிக்கிழமை (25) மாலை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
2015 நல்லாட்சி அரசாங்கமும் அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தி செயற்பட்டது. அக்காலகட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோஷித்த ராஜபக்ஷ இரண்டாவதாக கைது செய்யப்பட்டு, 40 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். அவருக்கு எதிராக இன்று வரை வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை.
அதேபோல் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டு, 92 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவருக்கு எதிராக இன்று வரை வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் எதிர்ப்பு குழுவின் செயலாளராக பதவி வகித்த ஆனந்த விஜேபால இந்த அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கிறார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தற்போதைய அரசியல் கைதுகளுக்கு தலைமை தாங்குகிறார். நல்லாட்சி அரசாங்கத்தில் செயற்பாடுகள் தான் தற்போது இடம்பெறுகிறது.
கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. நாங்கள் இம்முறை இதற்கு இடமளிக்கப் போவதில்லை.
போலியாக கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம். ஆகவே செய்வதை முறையாக செய்யுங்கள் என்று அரசாங்கத்திடமும், அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடமும் குறிப்பிட்டுக்கொள்கிறோம்.
கைது செய்யப்படுவதை ஆரம்பத்திலேயே அறிவோம். இருப்பினும் அதனை வெளிப்படுத்தவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, தற்போதைய கைதுகள் சட்டத்தின் பிரகாரம் இடம்பெறுவதில்லை. அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டது என்பது வெளிப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை. ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் வாய்ச்சொல் வீரர்களாகவே செயற்படுகிறார்கள்.
அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்தின் நிலையை அறிந்துகொள்ளலாம். பொய் மற்றும் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றலாம்.
இருப்பினும் அது நிலையற்றதாகும் என்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் என்றார்

Post a Comment