Header Ads



யேமன் விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் - உயிர் தப்பிய WHO பணிப்பாளர்


யேமன் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலின் போது, உலக சுகாதார தாபனத்தின்(WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் அந்த இடத்தில் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


யேமனின் சானா(Sana'a) விமான நிலையத்தில் இருந்து, விமானத்தில் ஏற முற்பட்ட போது, இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடாத்தியிருந்ததாக கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.


அத்துடன், தாம் பயணிக்கவிருந்த விமானத்தின் இரண்டு பணியாளர்களும் குறித்த தாக்குதலில் காயமடைந்திருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, குறித்த தாக்குதலின் போது, விமான நிலையத்தில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையம் மட்டுமன்றி இரண்டு மின் நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


கடந்த சனிக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் உரையாற்றிய போது, ஹவுதிப் படையினர் இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்தியமைக்காக, அவர்களின் உட்கட்டமைப்பு மொத்தமாக தளர்த்தப்படும் என தெரிவித்திருந்தார்.


ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹவுதி, யேமனின் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்தி வருகிறது. இதனாலேயே, யேமன் மீது இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.


இந்நிலையில், குறித்த தாக்குதல் யேமன் மக்களுக்கு எதிரான ஒரு பயங்கர குற்றம் என ஈரான் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.