முஸ்லிம் சட்டம் தொடர்பில் அமைச்சரவையில் பேசப்படவில்லை, அடுத்த சபை அமர்வில் இறுதி முடிவு
முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் கடந்த திங்களன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எந்தவொரு பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுகாதாரம் மற்றும் ஊடகத் துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இது குறித்து மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டில் அமுலில் இருக்கும் மலைநாட்டு திருமண சட்டம், முஸ்லிம் திருமண மற்றும் திருமண முறிவுச் சட்டம் மற்றும் தேச வழமை சட்டம் போன்ற தனியாள் சட்டங்கள் தொடர்பில் இதுவரையில் அமைச்சரவையில் பேசப்படவில்லை.
சமூக மட்டத்தில் இது குறித்து பேசப்பட்டு வருவதனால் எதிர்காலத்தில் நீதி விவகாரம் தொடர்பான ஆலோசனை குழுவில் கலந்துரையாடி, உரிய தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்மானத்துக்கு வர முடியும்.
அத்துடன், அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது இது விடயம் தொடர்பாக நீதியமைச்சரால் யோசனை முன்வைக்கப்பட்டு விவாதங்களின் பின்னர் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றார்.- Vidivelli

Post a Comment