Header Ads



யாழ்ப்பாணத்தில் 3 நாட்களில், திடீர் காய்ச்சலினால் 4 பேர் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் (Jaffna) திடீர் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று நாட்களில் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், பொதுமக்கள் இது தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாட வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


இது தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தபோது, மூன்று நாள்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகளை சாதாரண விடயமாகக் கடந்துவிட முடியாது என்று தெரிவித்தார்.


மேலும், கடுமையான சுவாசத் தொகுதி பாதிப்புக் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன.


கடந்த சில நாள்களாக வடக்கில் கடும் மழை பெய்திருக்கும் நிலையில் எலிக்காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.


ஆனால், இந்த உயிரிழப்புக்களுக்குக் எலிக்காய்ச்சல் காரணம் என்று இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. உண்ணிக்காய்ச்சல் அல்லது ஏதேனும் வைரஸ் காய்ச்சல்கூடக் காரணமாக இருக்கலாம்.


கொழும்பில் இருந்து ஆய்வறிக்கை வந்த பின்னரே காரணத்தைச் சரியாகக் கூறமுடியும்.


ஆயினும், பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம்.


இந்நிலையில், பொதுமக்கள் சுகாதாரத்தைச் சரியாகப் பேணிச் செயற்பட வேண்டியது அவசியம் என்பதுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் மற்றும் சுத்தமான குடிதண்ணீர் பாவனை அவசியமானது.


அத்துடன் காய்ச்சல், இருமல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாககத் தகுதி வாய்ந்த வைத்தியரை நாடி உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.