Header Ads



இந்தியாவுக்கு அடுத்தபடியாக மோசமான நிலையில் இலங்கை


 இலங்கையில் 5 - 19 வயது வரையிலான பாடசாலையில் கல்வி கற்கும் 410,000  பெண் பிள்ளைகள்  போசணை குறைப்பாடு காரணமாக எடை குறைவாக இருப்பதாக வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ நேற்று தெரிவித்தார்.


பிரித்தானிய ‘லான்செட் மெடிக்கல் ஜர்னல்’ இதழின் ஆய்வின் படி உலகில் போசணை குறைபாடு காரணமாக உடல் எடை குறைந்தவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது.


உலகளவில் உடல் எடை குறைவினால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களின் வீதம் இந்தியாவுக்கு அடுத்தபடியாக  இலங்கையில் உள்ளது.


199 நாடுகளில் 22 கோடி பேரிடம் சுமார் 1,900 ஆராய்ச்சியாளர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உடற் திணிவுச் சுட்டி (உயரத்திற்கான எடை) முக்கிய அளவுகோலாக எடுக்கப்பட்டுள்ளது.


போசணைக் குறைப்பாட்டால் பாடசலை பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டு மன்றி, மனவளர்ச்சி குன்றும் ஆபத்தில் உள்ளனர். எனவே இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில்  மனவளர்ச்சி குன்றிய  பிள்ளைகளின் தலைமுறை உருவாகும்.


போசணை குறைபாடு காரணமாக  பிள்ளைகளிடையே  என்சைம்கள் மற்றும் ஹோர்மோன்களின் உற்பத்தி  பலவீனமடைந்து நாளாந்த உடல் செயல்பாடுகளில் தொய்வு நிலை ஏற்பட வழிவகுக்கிறது. அத்தோடு சிறுவர்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.


போசணைக் குறைப்பாடு நெருக்கடி மனவளர்ச்சி குன்றுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இது நாட்டில் தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய கல்வி கற்ற  மற்றும் புத்திசாலி இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுக்கும்.

No comments

Powered by Blogger.