வீழ்ச்சிக்கான பொறுப்பை முழுமையாக ராஜபக்ஸக்கள் மீது சுமத்த முடியாது, மஹிந்தவின் பிறந்த தினத்தில் பங்கேற்றது ஏன்..?
பொதுஜன பெரமுன பிளவுபட்டுள்ளதாகவும் ஒரு பகுதியினர் தம்முடனும் மற்றொரு பகுதியினர் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் உள்ளதாக இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் பிறந்த தினத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதுடன், ராஜபக்ஸக்களுக்கு மாற்றீடாக செயற்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், தமது பிறந்தநாளுக்கும் மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியிடமிருந்து ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் ஏதும் விடுக்கப்படுகின்றதா எனவும் இந்த நேர்காணலில் கேள்வி எழுப்பப்பட்டது.
கட்சியினருக்கு தேவையான தருணத்தில் தம்மை வந்து சந்திப்பார்கள் என ஜனாதிபதி இதற்கு பதில் வழங்கியுள்ளார்.
அண்மையில் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்தும் ஜனாதிபதியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
குறைந்த பட்சம் குறித்த குற்றங்களுக்கான தண்டனை ஏதும் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்படவில்லையே எனவும் இதன்போது வினவப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ஜனாதிபதி, ''ராஜபக்ஸக்களின் காலப்பகுதியிலேயே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகியதும், ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவரின் பக்கம் திரும்பினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசாங்கத்தின் ஆதரவும் இருந்தது. ஆனால், அவர் பொறுப்பேற்க மறுத்துவிட்டார். ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமே தகர்ந்தது. எவரும் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. கால அடிப்படையில் IMF-இற்கு செல்வதற்கும் தாமதமானது. ஜூலை மாதம் ஜனாதிபதி பதவி விலகிய சந்தர்ப்பத்திலும் எதிர்க்கட்சி பொறுப்பேற்கவில்லை. பெரும்பாலானோர் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டனர். அது தொடர்பிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதனை விடுத்து, ஒரு பகுதியில் மாத்திரம் கவனம் செலுத்தக்கூடாது,'' என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாடு வங்குரோத்து அடைந்ததில் ராஜபக்ஸக்களுக்கும் பொறுப்பு உள்ளது எனவும் இந்த விடயத்தில் அவர்கள் மன்னிப்பு கோரியுள்ளதாகவும், அந்த காலப்பகுதியில் வாக்குறுதிகளை வழங்கி மக்களை மகிழ்வித்து அரசியல் செய்ய பலர் பழகிக்கொண்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment