Header Ads



ஏகாதிபத்திய நாடுகள்தான் பயங்கரவாதத்தை விதைக்கும் விளைநிலங்கள் - பலஸ்தீன ஆதரவுக் கூட்டத்தில் ஹக்கீம் சாடல்


பலஸ்தீனத்தில் இப்போது  நடப்பவையெல்லாம் மிக மோசமான மனிதப் படுகொலைகள் . இந்தப் படுகொலைகளை  ஊக்குவிக்கின்ற ஏகாதிபத்திய நாடுகள்தான்,  பயங்கரவாதத்தை விதைக்கின்ற விளைநிலங்களாக மாறியிருக்கின்றன என இலங்கையின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மிகவும்  காட்டமாகத் தெரிவித்தார்.

பலஸ்தீன மக்களுடனான ஒருமைப்பாட்டை வலியுறுத்தியும், போர் நிறுத்தம் மற்றும் சமாதானத்தை நிலைநாட்டுமாறு கோரியும் கொழும்பு ,ஹைட் பார்க் மைதானத்தில்  செவ்வாய்க்கிழமை(7) மாலை, சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் கூறியதாவது,


கொட்டும் அடைமழையிலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, அல்லல் படுகின்ற பலஸ்தீன மக்களுக்காக உங்களுடைய உணர்வுகளை வெளிக்கொணர்வதற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 


இங்கு,இன்று சகல கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும் ஒன்றிணைத்து இதனை சிறப்பாக நடாத்துகின்ற "வீ ஆர் வன்" ('We are One") அமைப்பினருக்கும்  நன்றியை தெரிவித்து கொள்ள கடமை பட்டிருக்கின்றோம்.


இங்கு வந்துள்ள முஸ்லிம் கட்சிகள், ஏனைய கட்சிகளில் இருக்கின்ற தலைவர்கள் எல்லோரினதும் சார்பில், இந்த ஏகாதிபத்திய வல்லரசுகள் எங்களுடைய நாடுகளைச் சூறையாடி ,இஸ்ரேலை ஊக்குவித்து புரிகின்ற மோசமாக யுத்த கொடுமைகளை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சமாதானம் கோருகின்ற இந்த கூட்டத்துக்கு, கொட்டும் மழை என்றும் கூட பாராமல்  வந்து கலந்து கொண்டு உங்களது ஆதரவைத் தந்தமைக்கு மீண்டும்  உங்களை கௌரவப்படுத்துகின்றேன்.


இப்பொழுது பலஸ்தீனத்தில் நடப்பவையெல்லாம் மிக மோசமான மனிதப் படுகொலைகள் .இந்தப் படுகொலைகளை  ஊக்குவிக்கின்ற ஏகாதிபத்திய நாடுகள்தான்,  பயங்கரவாதத்தை விதைக்கின்ற விளைநிலங்களாக மாறியிருக்கின்றன. 


எந்த காரணம் கொண்டும் ,எந்த விதமாகவும் பயங்கரவாதம் உருவெடுக்கின்றபோது, இவ்வாறான அநியாயங்களினால் பாதிக்கப்படுகின்ற மக்கள் வேறு வழியில்லாமல் அதற்குள் தள்ளப்படுகின்றார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கின்றது. நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்லர்.


எங்களுடைய இலங்கை நாட்டிலும் பயங்கரவாதத்தை உருவாக்கியவர்கள் இதே சியோனிச சக்திகள்தான் என்பதற்கான ஆதாரங்களைப்  பேசி இருக்கின்றோம். ஆனால், இன்று உண்மையை மூடி மறைப்பதற்காக எடுக்கின்ற நடவடிக்கைகளை   முறியடித்து ,அதன் மூலம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு இருக்கின்ற சியோனிச சக்திகள் முன்னெடுக்கின்ற இந்த படுமோசமான தாக்குதல்களுக்கு ஒருநாள் பதிலளிக்க  நேரும். அவர்கள் குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்துக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தபடுவார்கள்.அவ்வாறு நிறுத்தபடும்வரை எங்களது போராட்டம் தொடரும் . நியாயம் பெறுவதற்கான போராட்டம் எல்லா மூலை முடுக்குகளிலும் வியாபித்து, அதற்காக சகல இன மக்களும் கிளர்ந்தெழுவார்கள். அந்த காலம் வெகு தூரத்தில் இல்லை. இறையருளால்   பலஸ்தீனுக்கான வெற்றியையும்,சுதந்திரத்தை பெற்றுக் கொடுக்கும்வரை எங்களது போராட்டம் ஓயாது என்றார்.


(கொழும்பிலிருந்து மஹ்தியா காளிமுத்து)

No comments

Powered by Blogger.