Header Ads



அடுத்த வருடம் எத்தனை பில்லியன்களை வரியாக செலுத்த வேண்டும்..? பொருட்களின் விலை உயர்ந்து, வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைய வாய்ப்பு


2024 ஆம் ஆண்டில் பில்லியன்கணக்கான பணத்தை நாட்டு மக்கள் வரியாக செலுத்த வேண்டும் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


2023ஆம் ஆண்டை விட 88100 கோடி ரூபாய் (881 பில்லியன்) மறைமுக வரியாகவும், 34,200 கோடி ரூபாய் (342 பில்லியன்) நேரடி வரியாகவும் செலுத்த வேண்டும் என தெரியவந்துள்ளது.


வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் அமிந்த மெட்சிலா பெரேரா இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.


“2024 வரவு செலவுத் திட்டத்தின்படி அரசாங்கம் 122,400 கோடி ரூபா (1224 பில்லியன்) கூடுதல் வருவாயை எதிர்பார்க்கிறது. அதில் 72 சதவீதம் மறைமுக வரிகளாகவும் 28 சதவீதம் நேரடி வரிகளாகவும் இருக்கும்.


2023ஆம் ஆண்டு அரசாங்கம் எதிர்பார்க்கும் மொத்த வரி வருமானம் 2851 பில்லியன் ரூபாயாகும். 2024ஆம் ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் 4075 பில்லியன் ரூபாயாகும். அது வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கடுமையான வரி விதிப்பு காரணமாக அரிசி, பருப்பு, சீனி, கோதுமை மாவு, கருவாடு, கிழங்கு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் 72 சதவீதம் வரை உயரும்.


இதன் காரணமாக மக்களின் வாழ்க்கைத் தரம் முன்பு எப்போதும் இல்லாத அளவு வீழ்ச்சியடையும். மக்கள் செலுத்த வேண்டிய கூடுதல் வரியுடன் ஒப்பிடுகையில் வருமானம் அதிகரிக்காத பின்னணியில் நாட்டின் வறுமையும் அதிகரிக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.