காத்தான்குடி பெற்றோர்களினதும், இளைஞர்களினதும் கவனத்திற்கு
- ரீ.எல்.ஜவ்பர்கான் -
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி SN. காரியவசம் இன்று 24.11.2023 வெள்ளிக்கிழமை ஜும்ஆவின் பின்னர் பொதுமக்களுக்கு விஷேட உரை நிகழ்த்தினார்
காத்தான்குடி பிரதேசத்தில் போக்குவரத்து முறைகளை ஒழுங்குபடுத்துவதன் அவசியம் பற்றியும் இளைஞர்களது அதிருப்தியான செயற்பாடுகள் பற்றியும் மிக விரிவாகக் கூறினார்.
மோட்டார் வாகனங்களில் சைலன்ஸர் குழாய்களினை அகற்றி பெரும் சப்தத்துடன் பயணிப்பவர்களினை பொது மக்களின் உதவியுடன் கைது செய்வதெனவும், அவ்வாறு சைலன்சர்களினை அகற்றும் மோட்டார் வாகன திருத்துமிடங்கள் இனம் காணப்பட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதெனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், கடற்கரை மற்றும் கடற்கரை பிரதான வீதி ஆகியவற்றில் போக்குவரத்து நடைமுறைகளை கண்டிப்பாக அமுல்படுத்துவதெனவும், தலைக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதெனவும், பின் இரவு (நள்ளிரவு) நேரங்களில் அநாவசியமாக வீதிகளில் உலாவுகின்ற இளைஞர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதென்றும், திருமண வைபவங்களின் போது பொதுப் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக சப்தத்துடன் ஹோன் எழுப்புபவர்களினையும் கைது செய்வதெனவும், போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பாக தீவிர கண்கானிப்பினை மேற்கொள்வதெனவும் குறிப்பிட்டார்.
Driving License இல்லாத போக்குவரத்து ஒழுங்குகள் தெரியாத பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தங்களது மோட்டார் பைக் போன்றவற்றை வழங்கி மிக அநாகரிகமான முறையில் அவர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்பதையும் அவ்வாறான பிள்ளைகள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய பெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்தார்.
எனவே, இது விடயமாக பொது மக்கள் தங்களது முழுமையான ஒத்துழைப்புக்களை நல்குமாறு கேட்டுக் கொண்டார்.
இவ் ஏற்பாட்டினை எமது பள்ளிவாயல் தலைவர் செயலாளர் உட்பட நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் ஒழுங்கு படுத்தி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


Post a Comment