சூபிஸம் பற்றி அறிவூட்டுவது காலத்தின் தேவையாகும் - கலாநிதி ஏ.ஏ.ஏ. அஸ்வர்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம். அமீன் எழுதிய சூபிஸம் ஓர் அறிமுகம் (வரலாற்றுப் பார்வை) என்ற நூல், அண்மையில் ஸம் ஸம் நிறுவனத்தின் மாநாட்டு மண்டபத்தில் கலாநிதி என் கபூர்தீன் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கலாநிதி ஏ.ஏ.ஏ.அஸ்வர் அல்அஸ்ஹரி பொருளாளர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் முப்தி யூசுப் ஹனிபா தலைவர் ஸம்ஸம் பவுண்டேஷன் ஆகியோர் நூல் மதிப்பீட்டை மேற்கொண்டனர்.
புரூணை சுல்தான் ஷரீப் அலி இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைத்துறையின் முன்னாள் பீடாதிபதி கலாநிதி ஏ.எம் அபுவர்தீன் அவர்கள் அணிந்துரை வழங்கி உள்ளார். இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் சிரேஷ்ட உளவியல்சார் உளவளத்துணையாளர் யூ.எல்.எம். நௌபர் ஒரு வாசகனின் நோக்கில் நூலாசிரியர் என்ற தனது மனப்பதிவை முன்வைத்து நூலாசிரியரின் அறிவு, சமூக, சமயப் பணிகளைப் பற்றி உரையாற்றினார். அஷ்ஷெய்க் ஏ.எம். மிஹ்ழார் நன்றியுரை நிகழ்த்தினார். அஷ்ஷெய்க் இன்சாப் சலாஹூத்தீன் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தார்.
இந்நிகழ்வில் சமய அறிஞர்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், தொழிலதிபர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
சூபிஸம் அதன் தோற்றம் வளர்ச்சி அதன் உண்மை நிலை என்பன பற்றி அறிவூட்டுவது காலத்தின் தேவையாகும். பற்றற்ற உளநிலையைத் தன்னில் ஏற்படுத்தி இறை வணக்கத்தில் ஈடுபடுவதே உண்மையான சூபிஸம் ஆகும் என்றும் ஹதீஸ் ஜிப்ரீல் கற்றுத் தந்த இஹ்ஸானின் மூலம் அது தோற்றம் பெற்று தஸ்கியா என்னும் பெயரில் வழங்கி வந்தது என்றும் இந்த ஆத்ம ஞானக் கோட்பாடு இஸ்லாத்துடன் இணைந்து செல்கிறது என்றும் இந்நூல் ஆசிரியர் வரலாற்று ரீதியாக நிறுவ முயற்சித்துள்ளார்.
கலாநிதி அமீன் அவர்களின் ஆய்வுப்பணி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று தொடர வேண்டும் என்று பிராத்திக்கிறேன் என இந்நூல் பற்றி கலாநிதி அஹ்மத் அஸ்வர் அல்அஸ்ஹரி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment