Header Ads



முடிவுறாத் துயருக்கு 33 வயது


- யாழ் அஸீம் -


உங்களிடம் பறித்தெடுத்த நெஞ்சக் கனவுகளை 

நினைவுப்புதையல்களை 

உங்களது பிள்ளைகளின் எதிர்கால வரலாற்றை 

மண்ணின்மேல் உங்களது மதலைத் தமிழ் 

ஏன் மறைந்ததென்ற அங்கலாய்ப்பில் 

உங்களது முன்னோர்களின் 

எலும்புச் செல்வங்கள் உறங்குகின்ற 

ஈமப்புகை குழிகளை 

வாழையடி வாழையென உங்கள் தலைமுறைகளை 

அல்லாஹூ அக்பர் என ஆர்ப்பரித்த பள்ளிவாசல்களை 

எல்லாம் முன்வைத்து 

மன்னிப்பீர் என்று வாய்விட்டலறாமல் 

எல்லாம் அபகரித்து 

நட்பில்லாச் சூரியனின் கீழ் 

உப்புக்களர் வழியே ஓடென்று விரட்டிவிட்ட 

குற்றமெதுவுமறியா இக்குணக்குன்று மானிடர்கள் 

ஐந்து வருடங்கள் 

கண்ணீரும் சோறும் கலந்தே புசிக்கின்றனர். 

ஆறாம் வருடமும் அழுவதே விதியென்றால் 

வ. ஐ. ச. ஜெயபாலன் 


1990 ம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயக மண்ணிலிருந்து வேறோடு பிடுங்கி வீசப்பட்டதை முன்னிட்டு கவிஞர் வ. ஐ. ச. ஜெயபாலன் அவர்களால் பாடப்பட்ட கவிதையின் சில வரிகளே அவை. வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு ஆறாவது வருட முடிவை முன்னிட்டு கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் உயர்ச்சி பொங்கப் பாடிய இக்கவிதை இப்பொதும் எம் செவிகளில் எதிரொலிக்கிறது. சிறந்த கவிஞராக மட்டுமன்றி சிறந்த நடிகருமான 'ஆடுகளம்' புகழ் ஜெயபாலன் அவர்கள் மானிடதேசம் மிக்க உயர்ந்த பண்புடையவராவார். 


பரம்பரை பரம்பரையாக பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்த வடபுல முஸ்லிம்கள் அவர்களது தாயக மண்ணிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு, இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 33 வருடங்களானாலும், இவ்வரலாறானது வட மாகாண முஸ்லிம்களின் வரலாற்றில் என்றும் அழிக்க முடியாக வடுவாக பதிந்து விட்டது. 1990 ஒக்டோபர் மாதத்தின் இறுதியில் வடமாகாணத்திலுள்ள சகல மாவட்டங்களிலிருந்து சுமார் 75,000 முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்ட துயர நிகழ்வை நினைவு கூறும் கறுப்பு ஒக்டோபருக்கு மூன்று தசாப்தங்கள் கடந்தும் முடியாத துயரோடு வடபுல முஸ்லிம் அகதிகள் வாழ்ந்து கொண்டிருப்பது வேதனைக்குரியதாகும். 


வட புல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவு கூரல் மூலம் நடந்து முடிந்த கசப்பான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் மீட்டுதல் மூலம் தமிழ் முஸ்லிம் உறவுக்குப்பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென விமர்சித்து சிலர் கருத்துக்களை வெளியிடுகின்றனர். இவ்வாறு விமர்சிப்பது கருத்து வெளியிடும் சுதந்திரத்தையும் உரிமையையும் மறுப்பதற்குச் சமமாகும். 


1987 ஜூலை சம்பவத்தின் போது தமிழ் மக்கள் மீது பெரும்பான்மைச் சமூகத்தால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவங்களையும், மாவீரர் தினத்தையும், மற்றும் திலீபன் நினைவு தினத்தையும் தமிழ் மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். இவ்வாறு நினைவுபடுத்தலானது உறவுகளைப் பாதிக்கும் என எவரும் விமர்சிப்பதில்லை. ஒவ்வொரு சமூகமும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கும், செயற்படுத்துவதற்கும் உரிமையுள்ளது. அவ்வாறே எமது வடபுல முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பை கறுக்கு ஒக்டோபர் என நினைவு கூரலானது அவசியமானதும் நியாயமானதுமாகும். 


அத்துடன் கறுப்பு ஒக்டோபர் நிகழ்வுகளில் எம்மை பலவந்தமாக வெளியேற்றிய தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாட்டுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுகின்றோமே தவிர தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 


மேலும் ஒரு சமூகம் தனது சொந்த வரலாற்றை அறியவில்லையோ, அந்த சமூகம் எதிர்காலம் பற்றிய சிந்தனையில்லாத சமூகமாகும். எனவே எமது வரலாற்றை ஆதாரபூர்வமாக அடுத்த சந்ததிக்கு உரிய முறையில் கடத்தி வைக்க வேண்டியது. எமது தார்மிகக் கடமையாகும். எமது முன்னோர்கள், ஆய்வாளர்கள் எழுதி வைத்த வரலாற்றுப் பதிவுகளிலிருந்துதான் தற்போது எமது வரலாற்றை அறிந்து கொள்னிறோம். அண்மையில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் வடமாகாணச் சபையின் அவைத் தலைவருமான சீ. வீ. கே. சிவஞானம் அவர்கள், நல்லூர் கந்தசாமி ஆலயம் அமைந்துள்ள இடத்தில் இஸ்லாமிய பாபா ஒருவரின் சமாதி இருக்கின்றது என்று கூறப்படும் கருத்து முழுமையாக தவறானது என்று தெரிவித்திருந்தார். சீ. வீ. கே. சிவஞானம் அவர்கள் யாழ்ப்பான முஸ்லிம்களுடன் நெருக்கமான உறவு கொண்டவர் எனினும் இவ்வாறான தவறான கருத்துக்களை சுட்டிக் காட்டுவதன் மூலம் எமது தமிழ் முஸ்லிம் உறவு வலுப்பபெற வேண்டும் என்ற நோக்கில் ஏற்கனவே பிரபல எழுத்தானரும் நாவலாசிரியருமான செங்கை சூழியான் எழுதிய நல்லூர் கந்தசாமி கோயில் வரலாறு என்ற ஆய்வு நூலிலிருந்தும், அ. முத்துத் தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் (1972) என்ற வரலாற்று நூலிலிருந்தும் நல்லூர் கந்தசாமி கோயில் வீதிக்குள் முஸ்லிம் பெரியாருடைய சமாதி இருந்தது என்பதை விளக்க முடிந்தது. எனவே எமது எதிர்கால சந்ததிக்கு தற்போதைய வரலாறுகளையும், நிகழ்வுகளையும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பதிவு செய்து வைக்க வேண்டியது அவசியமாகும். 


அத்துடன் வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 33 வருடங்களாகியும், பூரணமான மீள் குடியேற்றம் செய்யப்படாமல் அகதி முகாம்களில் வாழும் அவலம் இன்னும் தொடர்கின்றது என்பது கசப்பான உண்மையாகும். இன்னும் ஆக்கபூர்வமான பூரண மீள் குடியேற்றம் நடைபெறாத காரணத்தை முன்னிட்டும் வெளியேற்றத்தை ஆண்டுதோறும் நினைவுகூர்வதன் மூலம் மறுக்கப்படும் எமது உரிமைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் இதுவாகும். சில அரசியல்வாதிகளாலும் அரச அதிகாரிகளாலும், புனர்வாழ்வு நிறுவனங்களாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒதுக்கப்படுகின்ற நிலை இன்னும் காணப்படுவது வேதனைக்குரியதாகும். 


முப்பத்து மூன்று வருடங்கள் கடந்தாலும் அந்த வெளியேற்ற நிகழ்வுகளும், அவலங்களும் எமக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களும் இப்போது நினைத்தாலும் இதயம் வலிக்கின்றது. காலத்தின் நீட்சியில் எம்மால் மன்னிக்க முடிந்தாலும் மறக்க முடியாது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் முஸ்லிம்களின் அமைப்பின் செயலாளர் நிஸாம் நைஸர் ஒக்டோபர் 30ம் திகதி யாழ் மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட இறுதி நேரங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை நேரில் கண்டவர் அனுபவித்தவர். இறுதி நேர அவலங்களை அவர் பின்வருமாறு கூறுகிறார். 


1990 ஒக்டோபர் 30ம் திகதி அதிகாலையில் ஒலிபெருக்கி கட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் வாகனங்களில் இவ்வாறு அறிவிப்புச் செய்யப்பட்டது. வீடுகளிலுள்ள ஆண்கள் யாவரும் ஜின்னா மைதாலத்தில் உடனடியாக வாருங்கள் அங்குள்ள ஆண்கள் யாவரும் சென்றபோது விடுதலைப் புலிகளின் முக்கியமான பொறுப்பிலுள்ள இளம்பரிதி இரண்டு மணித்தியாலங்களில் உடனடியாக வெளியேறுங்கள் என்று கட்டளையிட்டபோது எங்களில் ஒருவர் 'நாங்கள் எவ்வாறு செல்ல வேண்டும் என்று வினவியபோது சகல கட்டிடங்களையும் தவிர ஏனைய பொருட்களை கொண்டு செல்ல முடியும். என்று எமக்குக் கூறப்பட்டது. அவ்வேளையில் ஒருவர் எமது முஸ்லிம் சகோதரர்கள் சிலரை கைதிகளாக பிடித்து வைத்திருக்கின்றீர்கள் சிலரிடம் கப்பம் கேட்டும் தடுத்தும் வைத்துள்ளீர்கள்! அவர்களுடைய நிலைமை என்ன? என்று வினவிய போது, கைதிகளாக இருப்பவர்கள் நாங்கள் கோரும் மன்னிப்பு நிதியைக் கட்டி அவரைக் கூட்டிச் செல்லலாம். அவருடன் ஒருவர் மட்டும் நிற்கலாம் என்று எமக்கு கூறப்பட்டது. தொடர்ந்து, 20 நிமிடம் கடந்து விட்டது. இன்னும் ஒரு மணி 40 நிமிடம் உள்ளது. எந்தப் பிரச்சினையும் செய்யாமல் உடனடியாக வெளியேறுங்கள். அல்லது நீங்களும் தண்டிக்கப்படுவீர்கள். என்று எமக்குக் கூறப்பட்டது. நாங்கள் வீடுகளுக்குச் சென்ற போது வீடுகள் பூட்டப்பட்டு பெண்களும், சிறுவர்களும் வீதியில் நின்று அழுது கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் 16 பள்ளிவாசல்கள், 4 பாடசாலைகள் 13 பிரதான வீதிகள் அமைந்திருந்தன. சகலவற்றையும் துறந்து எமது தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நினைவுகள் துயரம் மிக்க அந்தக் கணங்கள் எந்த வினாடியும் மறக்க முடியாது. குறிப்பிட்ட 3 வீதிகளால் மட்டும் வெளியேற அனுமதித்தார்கள். கையில் கொண்டு செல்லக்கூடியவற்றையும் பணத்தையும் நகைகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்ட போது ஐந்து சந்தியிலும், சில முக்கிய சந்திகளிலும் நின்ற விடுதலைப்புலிகள் எமது பொருட்கள் யாவற்றையும் நகைகள் பணம் முழுவதையும் பறிமுதல் செய்தனர். 200 ரூபாய்கள் மட்டும் தந்தது மட்டுமன்றி எங்களுடைய உடல்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், பெண்புலிகள் பெண்களுடைய உடை, உடல்களை பரிசோதனை செய்து சகலதையும் பறிமுதல் செய்தனர். குழந்தைகளின் கை, கழுது;து, காதுகளிலிருந்த நகைகளையும் அபரித்தனர். பெண்புலி ஒருவர் உரப்பையொன்றை வைத்து சகலருடைய கைக்கடிகாரங்களையும் இடும்படி அவற்றை சேகரித்தார். எங்களுடைய பைசிக்கிள், மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள் சகலவற்றையும் அபகரித்த பின்னர் எமது லொறிகளில் ஆடு, மாடுகளைப் போல் ஏற்றப்பட்டோம். வவுனியாவின் எல்லைப் பகுதியில் எம்மை இறக்கிவிட்டு எமது வாகனங்களை எடுத்துச் சென்றுவிட்டனர். 


பின்னர் அனேமான வடமாகாண முஸ்லிம்கள் புத்தளத்துக்கு வந்து சேர்ந்தனர். புத்தளத்து மக்கள் எம்மை அன்புடன் அரவணைத்து தற்காலிகமாக அங்குள்ள பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டோம். அம்மக்கள் தமது உடல், பொருள் பணத்தை எமக்ககாகச் செலவழித்து அவர்கள் செய்த தியாகத்தை எம் உயிருள்ள வரை மறக்க முடியாது. 


இவ்வாறு வட மாகாணத்திலிருந்து வெறியேற்றப்பட்டு 33 வருடங்கள் கடந்தும், இம்மக்களின் மீள்குnயேற்றம் பூரணமாக நடைபெறவில்லை. மீள்குடியேற்றம் முற்றுப்பெறாத காரணத்தால், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அதிக முகாம்களின் வாழ்வியல் ஒழுங்கு சீரழிந்துள்ளது. பலர் கல்வியை இழந்துள்ளனர். சிலர் உளவியல் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பல இளைஞர்கள் சரியான தொழில் வசதிகள் இன்றி அகதி முகாம்களில் அல்லலுற்று வாழ்கின்றனர். இத்தகைய சிரமமான சூழ்நிலையிலும் கல்வி தொழில் விடயத்தில் முன்னேறியவர்கள் பலர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மீள்குடியேற்றமும் வீட்டுத் திட்டமும்.


1990ம் ஆண்டு வடக்கிலிருந்து 75,000 பேர் வெளியேற்றப்பட்டனர். 33 வருடகால சனத்தொகை வளர்ச்சி காரணமாக இப்போது இத்தொகை பலமடங்காக அதிகரித்துள்ளது. எனினும் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் பல சவால்கள் காணப்படுகின்றன. அசரு புலிகள் யுத்தம் 2009 இல் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். '1990ம் ஆண்டு முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்ட போது அதனைத் தடுக்க எவரும் முன்வரவில்லை. இப்போது எனது அரசாங்கம், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தபடியால், 2010 மே மாதமளவில் முஸ்லிம்கள் மீளக்குடியேற்றப்படுவதற்கான சகல வேலைத் திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என்றார். இவ்வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.


தொடர்ந்தும் வடமாகாண முஸ்லிம்கள் குடியேறுவதில் பல இறுக்கமான நிபந்தனைகள் காரணமாகவும் தடைப்பட்டுள்ளது. குறிப்பாக வீட்டுத் திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டுமாயின் மீள்குடியேறிய மாவட்டத்திலுள்ள அந்த இடிந்து சிதைந்த வீட்டில் தான் வசிக்க வேண்டும். குறுகிய கால 2 அல்லது 3 வருடங்களில் மீளக் குறியேறும் தமிழ் மக்களுடைய வீடுகளில் உடன் குடியேற முடியும். முப்பத்து மூன்று வருட காலமாக இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் அல்லலுற்று வீடு திரும்பும், வட மாகாண முஸ்லிம்கள், இடிந்து சிதைந்து குட்டிச் சுவராகி காடுகளாக மாறியிருக்கும் நிலையில் எவ்வாறு குடியேறுவது? எப்படி வசிப்பது? கிணறுகளும் மலச கூடங்களும் அழிந்து சிதைந்த நிலையிலுள்ள வீட்டில் எவ்வாறு வாழ்வது? இத்தகைய இறுக்கமான நிபந்தனையும் வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


யுத்தத்தால் வெளியேற்றப்பட்டு, அகதிகளாகவும் உள்நாட்டிலும், இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களுக்கு நஷ்டஈட்டையும் பெற்றுக் கொடுக்கவும் மீண்டும் இவ்வாறு நடக்காது என உத்தரவாதம் அளிப்பதும் நிலைமாறு கால நீதி எனப்படும். இம்முறைமை பல நாடுகளில் நடைமுறைமைப்படுத்துகிறது. இந்நீதி ஒழுங்கை ஐக்கிய நாடுகள் சபையும் அங்கீகரித்துள்ளது. இதனை கடந்த நல்லாட்சி அரசும் அங்கீகரித்து கையொப்பமிட்டுள்ளது. 


இந்நீதி ஒழுங்கின்படி வட மாகாண முஸ்லிம்கள் உடனடியாக மீளக்குடியேற முடியாத காரணம் 30 வருடங்களாக பாவனையற்று, காடுகளாக மாறியுள்ள இடங்களில் கொட்டில்கள் அமைத்து, மலசல கூடங்கள் ஒருவாக்கி எவ்வாறு குடியேறுவது என்பதாகும். இவ்வாறு பல இறுக்கமான நிபந்தனைகளை விதிப்பதன் காரணமாக வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி சமத்துவத்துக்கான யாழ் சிவில் சமூக அமைப்பின் தலைவரும், யாழ் கிளிநொச்சி முஸடலிம் சம்மேளகத்தின் பொதுச் செயலாளருமான ஆர். கே. சுவர்கஹான் (சுனீஸ்) பல்வேறு காரணிகளைக் குறிப்பிட்டுள்ளார். 


'வடமாகாண முஸ்லிம்கள் மீளக்குடியேற்ற விடயத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதற்கான சில உதாரணங்களைக் குறிப்பிடலாம். 


1. மீள் குடியேற்றத்துக்கான ஆண்டுகள் 13 வருடங்கள் சென்றாலும் யாழ் முஸ்லிம்களைப் பொறுப்பவரை பூரணமாக சாத்தியப்படவில்லை. இதுவரை 250 க்கு உட்பட்ட வீட்டு உதவிகள் தான் யாழ் முஸ்லிம்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இது ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் வெளியேற்றப்படும்போது 4500 குடும்பங்கள் இருந்தன. மீள் குடியேறுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது 2500 குடும்பங்கள் விருப்பம் தெரிவித்திருந்தன. அதனை பேருக்கும் பதிவு ஏற்படுத்தி பங்கீட்டு அட்டையும் வழங்கப்பட்டது. ஆனாலும் திட்டமிட்ட இதனைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் மீளாய்வு என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களை மட்டும் பதிவில் வைத்தனர். பதிவில் உள்ள 600 பேரைத் தவிர ஏனையவர்களை இரத்துச் செய்தனர். தற்போது சிறிது சிறிதாகக் குடியேறி 1000 குடும்பம் குடியேறியுள்ளனர். இன்னும் 1000 குடியேறக்கூடிய சாத்தியம் உண்டு. கடந்த 13 ஆண்டுகளில் 250 க்கு உட்பட்ட வீட்டு உதவிகள் கிடைத்தன என்றால் 2000 குடும்பங்களுக்கு எடுக்கும் காலம் மிகக் கூடியதாகும். இவ்வாறான சூழ்நிலையில் வெளியேற்றத்தின் வலிகளை சுமந்தவர்களும், மீள்குடியேற்றம் தேவை என விருப்புடன் வந்தவர்களும் மீளக்குடியேறுவதில் விரக்தியடைந்து திரும்பி விடுவார்கள். இவ்வாறான சூழ் நிலைக்குக் காரணம் அரசாங்கமா, மவாட்ட அரசாங்க அதிகாரிகளா என்பதை நாம் சிந்திக்கும்போது யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் திட்டமிட்டுத் தடுக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 


2. மேலும் புத்தளம் மாவட்டத்தில் யாழ் முஸ்லிம் வாக்குகள் 21,000 ஐ தாண்டியுள்ளது. யாழ் மண்ணில் இந்த வாக்குகள் இருக்குமாயின் நாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெறக்கூடிய சாத்தியம் உண்டு. அதே நேரம் புத்தளம் மாவட்டத்தில் யாழ் மண்ணில் பிறந்தவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவராயின் புத்தளம் மகக்ளுடன் முரண்படக்கூடிய சூழ்நிலை உருவாகக் கூடும். அதேநேரம் புத்தளத்திலுள்ள பல அகதி முகாம்களில் அடிப்பதை வசதிகளின்றி பல சிரமங்களை எதிர்நோக்கி வாழ்கின்றனர். எனவே அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற பாராளுமன்ற உறுப்பினர் தேவை என்னும் யாழ் மண்ணை பிறப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கு அது சாத்தியமில்லை. அத்துடன் யாழ்ப்பாணத்தில் 2010 இல் நடந்த மாநகர சபை தேர்தலில் 4 பிரதிநிதிகளைப் பெற முடிந்தது. 2018 இல் நடந்த மாநகர சபை தேர்தலில் 4 பிரதிநிதிகளைப் பெற முடிந்தது. 2018 இல் நடந்த மாநகர சபை தேர்தலில் ஒரு பிரதி நிதியையே பெற்றோம். எதிர் காலத்தில் எவரையும் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. வட்டார இணைப்புக்கள் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ் முஸ்லிம்களாகிய நாம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டிருக்கிறோம். 


3. வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வெளிமாவட்டத்தில் சொந்தமாக விடு இருக்கக் கூடாது என்பதும் மீள் குடியேற்றத்தை தடுக்கும் ஒரு காரணியாகும். 33 வருடங்கள் வாழ்பவர்கள் சிறுகச் சிறுகச் சேமித்து சிறியதொரு குடிசையை வாங்கினாலும் மீள்குடியேற்ற உரிமை மறுக்கப்படுவது மிகப்பெரும் அநீதியாகும். 


4. தாம் வாழும் பிரதேசத்திலிருந்து வாக்குகளை இரத்துச் செய்து விட்டு மீளக்குடியேறும் மாவட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கல்வி, தொழில் போன்ற காரணங்களால் ஏற்கனவே வாழ்ந்த மாவட்டங்களில் திடீரென வாக்குகளை வெட்டிச் செல்வது சாத்தியமில்லை. இதன் காரணமாகவும் மீள்குடியேற்றம் தடைப்பட்டுள்ளது. 


5. வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றம் தொடர்;பாக ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடப்பட்ட போதிலும், இன்றுவரை நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது. 


6. அரச சார்பற்ற நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு போன்ற நிறுவனங்களுக்கு, வடபுலமுஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை விரும்பாத அரச அதிகாரிகளும், சில அரசியல்வாதிகளும், சில இனவாதிகளும், மீளத்திரும்பும் அகதிகள் தம் சொத்துக்களை விற்பதற்கும், வியாபாரத்துக்காகவும், நட்டஈட்டைப் பெறவும் வருகின்றனர். இவர்கள் நிரந்தரமாக குடியிருக்க வரவில்லை என்ற காரணங்களைக் கூறி மீள் குடியேற்றத்தை தந்திரமாகத் தடுத்து வருகின்றனர். 


7. மீள் குடியேற்றத்தை தடுப்பதிலும், வீட்டுத் திட்டங்களில் உள்வாங்கப்படுவதற்கும் இடையூறான காரணிகளுள் பிரதானமானது யாதெனில், 2008 க்கு முன் இடம் பெயர்ந்தவர்கள், பழைய அகதிகள் எனவும், 2008 க்கு பின்னர் இடம் பெயர்ந்தவர்கள் பழைய அகதிகள் எனவும் பாகுபடுத்தப்பட்டு, புதிய அகதிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டதாதும். இதில் 1990 இல் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் அகதிகளைப் புறக்கணிப்பதற்கு அரசியல்வாதிகளாலும், சில தமிழ் உயர் அதிகாரிகளாலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகும். 


அண்மையில் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்கள், வடக்கில் வாழும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 100 ஏன்னர் காணி வழங்கத் திட்டமிட்டுள்ளேன் எனக் கூறியபோது, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள், தமிழ் - முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்த பிரதமர் முயற்சிக்கிறார் என இம்மீள்குடியேற்றம் சாத்தியமில்லை எனக்கூறி தடுக்க முயற்சிக்கிறார். இவ்வாறான அரசியல்வாதிகளும், தமிழ் உயர் அதிகாரிகளும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க முடியற்சிக்கின்றனர் என்பதற்கு இந்நிகழ்வு அத்தாட்சியாகும். 


33 வருடங்கள் அகதி வாழ்க்கை வாந்து தாயக மண்ணுக்கு திரும்பும் இம்மக்கள் மீது கருணைகாட்டுவதற்குப் பதிலாக, எவ்வித நெகிழ்வுத் தன்மையற்ற இறுக்கமாக நிபந்தனைகளையே தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர். மீள்குடியேற்றம் ஆரம்பமாகி கடந்த 13 வருடங்களாக யாழ் முஸ்லிம் அகதிகளுக்கு கிராம சேவையாளர் பிரிவு, மீள்குடியேற்ற அமைச்சு, இந்திய வீடமைப்புத் திட்டம் என்பவற்றினூடாக இதுவரை 250 வீடுகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன என்பதிலிருந்து எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். 


அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நாச்சிக்குடா பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்கும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனை அரசுக்குத் தெரிவிக்கும் நோக்கில் அண்மையில் நாச்சிக்குடாவிலிருந்து ஹாமீம் என்ற சகோதரரும் அவருடன் ஈசப்பா என்பவரும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகம் வரை நடந்து சென்று தமது கோரிக்கைகளை; கையளித்தனர். 45 நாட்களாக பலசிரமங்களுக்கு மத்தியிலும் நடந்து சென்ற அவர்களுக்கு நீர்கொழும்பில் சிறிது தடை ஏற்பட்டாலும் அவர்களுடைய நோக்கத்தை நிறைவேற்றினர். நாச்சிக்குடா மக்களுடைய மீள்குடியேற்றத்தில் பல தடைகளும், பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக அவர்களுடைய வாழ்விட எல்லைகள் மாற்றப்பட்டுள்ளன. நாச்சிக்குடா என்ற பிரதேசம் சுருங்கி முழங்காவில் என்ற பிரதேசம் விரிவாக்கப்பட்டுள்ளது. சில அதிகாரிகளால் எமது மீள்குடியேற்றம் புறக்கணிக்கப்படுவதற்கு இந்நிகழ்வும் ஒரு உதாரணமாகும். 


1990 ஒக்டோபரில் வடமாகாண முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு சகல பொருட்களும் சூறையாடப்பட்டு வெளியேற்றப்பட்ட வரலாறு உலகறிந்த விடயம். அம்மக்கள் வாழ்ந்து இடிந்து சிதையுண்ட வீடு, காணி உறுதிப்பத்திரம், முன்னர் குடியிருந்ததற்கான வாக்குப்பதிவு, இவைகள் யாவும் இருக்கும்போது, இம்மக்கள் தாயக மண்ணில் வாழ்ந்த உரிமையை நிரூபிக்க வேறென்ன ஆதாரம் வேண்டும். 


எனவே இத்தகைய சந்தர்ப்பத்தில் வடமாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூக சேவை நிறுவனங்கள், நலன் விரும்பிகள், புத்தி ஜீவிகள் ஒன்றிணைந்து இம்மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஜனாதிபதி, பிரதமர், ஆகியோருக்கு அறியத்தருவதுடன் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கும், 90ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கும், குறுகிய காலத்தில் மீள் குடியேறிய தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்துக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கி, வடமாகாண முஸ்லிம்களின் மீள்குnடியேற்றத்துக்கென விசேட திட்டங்களையும் உருவாக்க முயற்சிப்பது காலத்தின் கட்டாயமாகும். 


No comments

Powered by Blogger.