Header Ads



சட்டவிரோதமாக இறக்குமதியான வாகனங்களை பறிக்கப்போகும் அரசாங்கம்


இறக்குமதி தடைக்காலத்தில் சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான வாகனங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்தமை தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் இருந்து விரிவான அறிக்கையை நிதியமைச்சு கோரியுள்ளது.


மார்ச் 2020 முதல், இலங்கை தனது வெளிநாட்டு நாணய கையிருப்பை நிர்வகிப்பதற்காக வாகன இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது.


இறக்குமதி தடைக்காலத்தில் சட்டவிரோதமான முறையில் 5000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக அண்மைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகிருந்தனர்.


இந்த விடயம் தொடர்பில் பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர், இறக்குமதியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ்வாறான வாகனங்கள் இருந்தால் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.


தடைக்காலத்தில் இவ்வாறான வாகனங்களை இறக்குமதி செய்தமை தொடர்பில் தமக்கு எவ்வித அறிக்கையும் கிடைக்கவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறாயினும், ஊடகங்களில் வெளியான செய்திகள் 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலானது எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.


இதேவேளை, 2020 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டதிலிருந்து சுமார் 6,900 வாகனங்களை அரசாங்கம் விசேட நோக்கங்களுக்காக இறக்குமதி செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் வெளிப்படுத்தினார்.


இவற்றில் பெரும்பாலான வாகனங்கள் இலங்கை பொலிஸாருக்காக கொள்வனவு செய்யப்பட்டன. தூதரக நோக்கங்களுக்காகவும் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.


சட்டத்துக்குப் புறம்பாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் வழமையான நடைமுறைகளின் படி பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் வலியுறுத்தினார்.


"இறக்குமதி தடை காலத்தில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


இந்த சட்டவிரோத இறக்குமதிகள் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளன, மேலும் இந்த விடயத்தை முழுமையாக ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.