36 வருடங்கள் சுகாதாரத்துறையில் கடமையாற்றிய மருந்தாளர் றகுமான் ஓய்வு
அட்டாளைச்சேனை 4ஆம் பிரிவைச் சேர்ந்த இப்றாலெப்பை, ஆசறா உம்மா தம்பதிகளுக்கு 1963.12.20 ஆம் திகதி மூத்த புதல்வனாக பிறந்த அப்துல் றகுமான் தனது ஆரம்பக் கல்வி மற்றும் உயர் கல்வியினை அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் கற்றார்.
உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கற்ற அவர் 1986 ஆம் ஆண்டு அம்பாரையில் 1 1/2 வருடங்கள் மருந்து கலவையாளர் பயிற்சியினை நிறைவு செய்து 1987.10.01 திகதி மருந்து கலவையாளராக நியமனம் பெற்றார். அக்காலப்பகுதியில் அம்பாறை மற்றும் பொத்துவில் வைத்தியசாலைகளிலும் கடமையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற மருந்தாளர்களுக்கான போட்டிப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த அவர், கொழும்பு மருத்துவக் கல்லூரியில் இரண்டு வருடங்கள் மருந்தாளர் பயிற்சினை நிறைவு செய்து மருந்தாளராக நியமனம் பெற்றார். அதன் பின்னர் அங்கோடை மனநல வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் மருந்தாளராகவும் கடமையாற்றினார்.
சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டு 17 நாட்களின் பின்னர் 2005.01.13ஆம் திகதி அசாதாரண சூழ்நிலையில் கல்முனை பிராந்திய மருந்து விநியோகப் பிரிவில் பொறுப்பு உத்தியோகத்தராகக் கடமையேற்றார். சுமார் 17வருடங்கள் அங்கு கடமையாற்றிய அவர், 2006 தொடக்கம் 2014 வரையான காலப் பகுதிகளில் பதில் பிராந்திய மருந்தாளராகவும் பணியாற்றினார்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் ஐந்து பேரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ் கல்முனையில் 17 வருடங்கள் பணியாற்றிய அப்துல் றகுமான், அதிகாரிகள், சக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என சகலருடனும் அன்பாகப் பழகியதுடன், கடமை ரீதியாகவும் கடமைக்கு அப்பாலும் சேவையாற்றக்கூடிய நல்ல பண்புகளையும் கொண்டிருந்ததனால் அனைவரதும் உள்ளங்களில் இடம்பிடித்தார்.
வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகின்ற போதும், அவசர தேவைகளின் போதும் தனது மருந்தகப் பிரிவில் குறித்த மருந்துகள் இல்லாத போதும் அதனைத்தேடிப் பெற்றுக் கொடுப்பதற்கும் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு மருந்துகளை பெற்றுக்கொடுத்தார். அதனால் சுகாதாரத்துறைக்குள் நன்மதிப்பினைப் பெற்று சிறந்து விளங்கினார்.
11 வருடங்கள் மருந்து கலவையாளராகவும் 25 வருடங்கள் மருந்தாளராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்து மருந்து விநியோகம் மற்றும் முகாமைத்துவத்தில் திறன்பட செயல்பட்ட மருந்தாளர் ஐ.எல்.அப்துல் றகுமான் கடந்த 2023.09.20 ஆம் திகதி சுகாதாரத்துறைக்கு விடை கொடுத்தார்.
அட்டாளைச்சேனை 11ஆம் பிரிவைச் சேர்ந்த எம்.ஐ.மர்சூனா என்பவரை 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்த அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளது. இதில் அவரது சிரேஷ்ட புதல்வர் ஏ.ஆர்.எம்.ஆசிக் (விஞ்ஞான பாட ஆசிரியர்) அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் பிரதி அதிபராகவும், கனிஷ்ட புதல்வர் ஏ.ஆர்.எம்.ஆரிப் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்தியராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மருந்தாளர் றகுமானுடைய மகத்தான பணியை பாராட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு விழா திங்கட்கிழமை (25) பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித், திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய மருந்தாளர் திருமதி தர்ஷினி இந்திரகுமார் ஆகியோர் மருந்தாளர் றகுமானின் கடந்தகால சேவைகளை நினைவுகூர்ந்து உரையாற்றினர்.
அதனைத் தொடர்ந்து பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட பிரிவுப் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் மருந்தாளர் றகுமானின் சேவையினை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.
.jfif.jpg)
Post a Comment