Header Ads



ராஜாங்க அமைச்சருக்கு ஒரு வருடத்திற்கு முன் அச்சுறுத்தல் விடுத்தவர் கைது


பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனுக்கு அச்சுறுத்தும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பியமை மற்றும் முகநூலில் அச்சுறுத்தல் பதிவு செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவுல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


காலிமுகத்திடல் போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில், இராஜாங்க அமைச்சருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.


குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம, போராட்டத்தின் போது சந்தேகநபர் இராஜாங்க அமைச்சருக்கு அச்சுறுத்தும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகத் தெரிவித்தார்.


மேலும், சந்தேகநபர் அமைச்சருக்கு எதிராக முகநூலில் அச்சுறுத்தும் பதிவுகளை வெளியிட்டதாக தெரிவித்த அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி, அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கருத்துச் சுதந்திரத்தை வழங்கியுள்ள போதிலும், அதனை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவதற்கு இடமில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.


இதன் மூலம் சந்தேக நபர் நாடாளுமன்ற சிறப்புரிமை சட்டத்தையும் மீறியுள்ளதாக அரசாங்க சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகளின் மூலம் சந்தேகநபர் பிணைச் சட்டத்தின் விதிகளை மீறியுள்ளதால், அவரது பிணை கோரிக்கையை நிராகரித்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஷமிந்த விக்கிரம கோரிக்கை விடுத்தார்.


இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சந்தேக நபரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.