Header Ads



தாடி விவகாரம் - மாணவர் நுஸைபுக்கு ஆதரவாக இன்றும் சாலிய பீரிஸ் ஆஜர்


- Raazi Mohamed -


கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்திருந்தமைக்காக பரீட்சை எழுத அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக சௌக்ய பராமரிப்பு பீட மாணவன் நுஸைப் மேல் முறையீட்டு நீதி மன்றில் தொடுத்த வழக்கு இன்று(4) மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.


பிரதிவாதிகள் சார்பில் தோன்றிய சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணி பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நீர்ப்பிரச்சினை சம்பந்தமாகவே பல்கலைக்கழகம் பரீட்சையை ஒத்திப்போட்டிருப்பதாகவும் இம்மாத இறுதியில் நீர்ப்பிரச்சினை தீர்க்கப்படுமென்றும் அப்போது பரீட்சைகள் நடாத்தப்படும் என்றும் மன்றிற்கு தெரிவித்ததுடன் குறிப்பிட்ட மனு சம்பந்தமாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டி இருப்பதனால் கால அவகாசம் வேண்டும் என நீதிமன்றினைக் கோரியிருந்தார்.


மாணவர் நுஸைப் தரப்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அவர்களின் தரப்பு முன்வைத்த தமது வாதத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் கொடுப்பதாயின் கொடுக்கப்படும் அவகாச காலம் முழுவதும் பரீட்சை நடத்த மாட்டோம் என பல்கலைக்கழகம் எடுத்துக் கொண்ட பொறுப்பேற்பினை நீடிக்க வேண்டும் என நீதிமன்றத்தை வேண்டியது.


இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை 17 அல்லது அதற்கு முன்னைய தினங்களில் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை அரச தரப்பு சமர்ப்பிக்க அனுமதி வழங்கியது. அந்த ஆட்சேபனைகளுக்கு எதிராக  மறுமொழியினை ஜூலை 24ம் திகதி வாதிகள் தரப்பு சமர்ப்பிக்க வேண்டும் என ஒப்புக் கொள்ளப்பட்டது. வழக்கு எதிர்வரும் 27ம் திகதி மீண்டு விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்டது.


மாணவன் நுஸைப் சார்பாக குரல்கள் இயக்க சட்டத்தரணி றுடானி ஸாஹிர் அவர்கள் இவ்வழக்கின் அறிவுறுத்தல் சட்டத்தரணியாக செயற்படுகின்றார். குரல்கள் இயக்கம் மாணவன் நுஸைபின் கலாச்சார உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ஆண் தாதிகளாக பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெறும் ஆண் மருத்துவ மாணவர்கள் தாடி வைக்கக்கூடாது என்பது வைத்தியத்துறையில் உள்ள சட்டம். அதனை மீறுவதற்கு மாணவர்களுக்கு அனுமதியில்லை.இது உலகில் எல்லா நாடுகளிலும் உள்ள சட்டம். அதேபோல் அத்தகைய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது அத்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் உற்பட அனைவரினதும் கடமை. அதற்கு எதிராக ஒரு மாணவன் செயற்பட்டால் அது பல்கலைக்கழக சட்டத்தை மீறியதற்குச் சமன். பல்கலைக்கழகங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திறமையான அதிகாரிகள் இல்லாத காரணங்களால் தான் இது போன்ற விடயங்கள் நீதிமன்றம் செல்கின்றன. இதனால உண்மையில் பாதிக்கப்படுவது மாணவர்களின் கல்வி என்பதை ஒவ்வொரு மாணவனும் சரியாக புரிந்து செயற்பட்டால் பிரச்சினை முடிந்து விடும்.

    ReplyDelete

Powered by Blogger.