Header Ads



ஆட்டு மந்தை கோட்பாடு


2005 ஆம் ஆண்டு துருக்கியிலுள்ள ஒரு கிராமப்புறத்தில் ஒரு வினோத சம்பவம் நடந்ததுள்ளது.


மலைப்பக்கமாக மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் ஒன்று மலை உச்சியில் ஏறி அருகாமையில் உள்ள மலைப் பாறை மீது குதித்துப் பார்த்துள்ளது. இரு மலைகளுக்கும் இடைப்பட்ட தூரம் அதிகம் என்பதால் அந்த ஆடு கீழே உருண்டு மாய்ந்து போயுள்ளது. அங்கே அதிசயம் என்னவென்றால், அதனை பின்தொடர்ந்து வந்த சுமார் 1500 ஆடுகளும் ஒன்றின் பின் ஒன்றாக அப்படியே, அதேபோல் துள்ளிப் பாய்ந்து உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளன!


பிற்காலத்தில் "ஆட்டு மந்தைக் கோட்பாடு"(herd behaviour) பற்றிய ஆய்வுகள் மேற்கோள்ளப்பட இச்சம்பவம் பிரதான காரணமாக மாறியது.


நவீன வாழ்வியல் முறைகளில், எமது உணவு, உடை, நடை பாவனைகளை நாம் உன்னிப்பாக அவதானித்தால், ஆட்டு மந்தைக் கோட்பாட்டை அணுவளவும் பிசகாது நாம் கடைப்பிடிப்பதை கண்டுகொள்ளலாம்.


தப்பென்று தெரிந்து கொண்டும் குறித்த ஒரு சடங்கு சம்பிரதாயத்தை, அல்லது கலாச்சாரம் சார்ந்த திணிப்புக்களை நாம் தழுவித்தான் ஆகவேண்டும் என்பதே "ஆட்டு மந்தைப் போக்கு" மனப்பாங்காகும்.


ஆட்டங்கள் கொண்டாட்டங்களை எல்லோரும் ஆடுகிறார்கள் கொண்டாடுகின்றனர் என்பதற்கே நாமும் ஆடுகிறோம், கொண்டாடுகின்றோம்.


திருமண விழாக்களை, குடும்ப நிகழ்வுகளை எல்லோரும் ஆடம்பரமாக ஆரவாரமாக எடுப்பதற்காகவே நாமும் ஆடம்பரமான, அனாவசியமான செலவுகளை செய்கிறோம்.


வீடுகளை கட்டும் போது, வாகனங்கள் வாங்கும் போது எல்லோரும் செய்வது போன்றே நாமும் செய்கிறோம்.


கிழிந்த, அசிங்கமான ஆடை மாடல்களை எல்லோரும் அணிகிறார்கள் என்பதற்கே நாமும் அணிகின்றோம்.


அருவருப்பான சிகை அலங்காரங்களை எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் செய்கிறோம்.


இங்கு நாம் சுயபுத்தி பறிக்கப்பட்டவர்கள் போல, முடிவெடுக்க மறுக்கப்பட்டவர்கள் போல, சமூக, பொருளாதார, கலை, கலாச்சாரம் என வாழ்வின் பன்முகப்பட்ட போக்குகளிலும் ஆட்டு மந்தைக் கூட்டத்தை பின்தொடர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.


நிச்சயிக்கப்பட்ட அழிவின் பாலும், கண் காணும் அதல பாதாளத்திற்கும் நம்மை தள்ளி விடும் என்று தெரிந்து கொண்டே நாமும் பின்தொடர்வதே இங்கு வேதனைக்குறியதாகும்.

No comments

Powered by Blogger.