ஜம்மியத்துல் உலமா சபை விடுத்துள்ள வேண்டுகோள்
(ஏயெஸ் மெளலானா)
மக்களால் தாங்கிக் கொள்ள முடியாதளவில் நீடித்துச் செல்கின்ற அதிகூடிய வெப்பம் நிறைந்த காலநிலையை தணிப்பதற்காக மழை பொழிய வேண்டி ஐவேளைத் தொழுகைகளிலும் குனூத் ஓதுமாறு அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (11) பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரியில் மேற்படி உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஷிம் தலைமையில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக இவ்வேண்டுகோள் விடுக்கப்படுவதாக அதன் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாசிர்கனி தெரிவித்தார்.
இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஐவேளைத் தொழுகைகளிலும் குனூத் அந்நாஸிலாவை ஓதுமாறு பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் இமாம்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், வெள்ளிக்கிழமை குத்பாவில் மழை வேண்டி விஷேடமாக பிரார்த்திக்குமாறும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் மழை வேண்டி தொழுகை நடத்துமாறும் அம்பாறை மாவட்ட உலமா சபை வேண்டுகோள் விடுப்பதாக செயலாளர் ஏ.எல்.நாசிர்கனி தெரிவித்தார்.

மழை தேடித் தொழுவதனால் மழை சிலவேளை பெய்யக்கூடும். ஆனால் அதற்கு முன்பு அந்த மக்கள் மழை தேடித் தொழுவதற்கு அவர்களைத் தகுதியுடையவர்களா என்பதை முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த தொழுகை்குத் தகுதியற்றவர்கள் எவ்வளவு தொழுதாலும் அதனால் பயன்கிடைக்கப் போவதில்லை. ஸூரா நூஹ் இல் அல்லாஹ் அந்த தகுதியை நூஹ் அலை மூலமாக மக்களுக்குத் தெரியப்படுத்துகின்றான். “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” (அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான் (71;10,11) அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக முதலில் பாவமன்னிப்புக் கேட்டு அல்லாஹ்வை அணுக வேண்டும். அதன்பின்னர் மழை தானாக கொட்டும்.அது தான் அல்குர்ஆனின் அறிவுரை.
ReplyDelete